Sunday, January 29, 2006

புதிய தலிபான்கள்!...

புதிய தலிபான்கள்!...


இலங்கையின் இனமுரண்பாட்டை வெகுவாக உள்வாங்கும் ஒரு சராசரி குடிமக(ளு)னுக்கு அதன் முரண்பாடானது இன ஒடுக்குமுறையின் பலாத்தகார வன்முறையாகத்தாம் தெரிகிறது.நாம் எதற்காகப் போராடுவதற்கு வெளிக்கிட்டோம்?, ஈழக் கோசம் எதையொட்டி எழுந்தது?,போராடும் சூழ்நிலை எங்ஙனம் தோன்றியது?,இப்போது மீளவும் இலங்கையரசோடு பேசவேண்டிய தேவையும்,யுத்தம் மேற்கொண்டு நகர முடியாத சூழ்நிலையும் எப்படித் தோன்றியது?,எமது பிரச்சனை இலங்கை அரசுக்கும்,தமிழ் பேசும் மக்களுக்குமானதாகக் கற்பிக்கப்பட்டது சரிதாமா?
கூடவே, எங்கள் இனப் பிரச்சனையில் வெளி நாடுகளின் பங்கு எதை நோக்கித்தாம் நகர்ந்து கொண்டு செல்கிறது?

இவை கேள்விகள்தாம்!

ஆனால் பதில் எத்தகைய தளத்திலிருந்து மேலெழுகிறதென்பதும் ஒரு கேள்வியாகவே விரிகிறது.இது குறித்துச் சில உள்மறைவு நலன்களைப் பார்ப்போம்.இவை எமது மக்களின்-நாட்டின் நலனுக்கு எதிராகவே இருப்பதை நாம் கவனிக்கத் தவறும் ஒவ்வொரு கணமும், நமது மக்களின் "சுய நிர்ணயத்தின"; இருப்புப் பலவீனமானது.இந்த மக்கள் இதுவரை இலட்சம் மக்களை இழந்து நடுத்தெருவில் நிற்கும்போது, நாம் வாழாதிருக்க முடியாது.இன்றைய பாலஸ்தீன அரசியலையும்,காமாஸ்சின் வெற்றியையும் எண்ணி யாரும் மமதை கொள்ள வேண்டாம்.அது தற்காலிகமானது.அது போலவே புலிகளின் நிலையும் என்பதை விளங்க முற்படுவோம்.


தீர்மானம்:

உலகத்தில் ஏதோவொரு மூலையில் வதிகின்ற தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை, எவரெவரோ தீர்மானிக்கும் அரசியலாக முன்னெடுக்கப்படுவதில் எந்த நலன்கள் முட்டிமோதுகின்றன? இன்றைய தினம்வரை பேச்சு வார்த்தையைக் தீர்மானிப்பவர்கள் எம்மை ஏமாற்றி வருவதாகவும்,அது தமிழீழ விடுதலைப் புலிகளைப் படுகுழியில் தள்ளுவதற்கான பொறியைக்கொண்டிருப்பதாகவும் கடந்த மாவீரர் தினவுரையில் திரு. பாலசிங்கம் தெரிவித்திருந்தார்.வெளி நாடுகளில் இடம் பெறும் பேச்சு வார்த்தைகள் யாவும் தம்மை அரசியல் ரீதியாக் கட்டிப்போடும் இராஜ தந்திரத்தை-பொறியைக் கொண்டிருப்பதாகவும,; அவர் விசனம் தெரிவித்தார்.எனவே பேசிப் பயன் கிடைக்காதென்றும் அந்தவுரையில் திடமாக வலியுறுத்திய அவர், தமது அடுத்த கட்ட நகர்வு யுத்தத்தினூடாகத்தாம் விரியுமென்றும் ப+டகமாகக் கருத்திட்டார்.


எனினும், இப்போது பழைய பஞ்சாங்கப் பேச்சு வார்த்தை ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.கடந்த கால் நூற்றாண்டுகளில் இந்தப் பேச்சு வார்த்தைகள்பட்ட பாடுகள் யாவும் தாம் அறிந்ததே என்றும், அதில் நம்பிக்கையிழந்து போராடியதாக் கதைவிடும் புலிகளுக்கு அப்பப்ப தாம் கூறுவதையே "தாம்" மறந்து, புதுக்கதைவிடுவதும் இலகுவாகிறது.ஆனால் மக்களோ தங்கள் நலனை முதன்மைப்படுத்தாத தீர்மானங்கள் வெறும் இயக்க நலனே என்பதை நன்கு அறிவார்கள்.இந்தத் தீர்மானகரமான மக்களின் அபிலாசைகள், யுத்தம் தொலைந்த சமூக வாழ்வாக அவாவுற்றுக்கிடக்கப் புலிகளோ அடுத்த ரவுண்டுச் சொப்பிங் செய்யும்,உடல் இச்சையைத் தீர்க்கும்(பாலசிங்கத்தின் பார்வைதாம் இஃது) வெளிநாட்டுப் பயணத்துக்குத் தயாராகி வருகிறார்கள்.இதை அம்பலப்படுத்துபவர்களைப் புலிகள் மக்கள் விரோதிகளாகவும் முன் நிறுத்த முடியும்.ஏனெனில் மக்களைக்கண்டு அச்சமுறும் தமிழ்ப் பாசிசம் மக்களுக்கு உண்மைகள் போய்ச் சேரும் அனைத்து வடிவங்களையும் அழிப்பதற்குத் தயாராகிறார்கள்.


இப்போது இப்படிக் கேட்போம்:"புலிகள் என்ன தீர்மானத்தை மக்கள் முன் மொழிந்தார்கள்?"அவர்களது நலனை ஒரு தீர்மானகரமான வரைவுக்குள் உட்படுத்தி அதை அந்த மக்களுக்கு-அவர்களின் இசைவுக்கு,ஒப்புதலுக்கு வழங்கினார்களா?ஏனெனில் மக்கள்தாம் இழப்புகளைச் சந்தித்தவர்கள்,அவர்கள்தாம் தமது மழலைகளைப் போருக்குப் பிடித்துச் செல்ல மௌனமாக இருந்தவர்கள்.எனவே மக்களைவிட இயக்க நலன் முதன்மையாக இருக்க முடியாது.இங்கே இவற்றைக் கூறுவது புலிகள் மக்களின் நலனிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதைச் சுட்டவே.அவர்களுக்கும் மக்களுக்கும் எந்த வகை நலனிலும் பொருத்தப்பாடுகிடையாது.மக்களின் உரிமைகளைத் தமது இயக்க,வர்க்க நலனுக்குப் பயன்படுத்தும் ஆயுதம் தரித்த தமிழ் ஆளும் கும்பலிடம் எந்த மக்கள் நலன் சார்ந்த தீர்மானமும் இல்லை.மாறாகப் புலி நலனே-அரசியலே முதன்மையானது.இந்த நலன் அந்நியக் கூட்டோடு தமது இருப்பைக் காப்பதுதாம்-இது குழு நலன்,புதிய தமிழ்த் தரகு முதலாளியத்தின் வர்க்க நலன்!

பேச்சு வார்த்தை:

முதலில் பேச்சு வார்த்தை மூலமே நமது தீர்வை எட்ட முடியுமென்று ஒரு வரையறையை இதுவரை இருதரப்பும் செய்யவில்லை.அந்த வரையறையில் நின்று, நிதானமாகப் பேசுவதற்கான திட்ட வரைவு எதுவுமின்றி,ஒரு பேச்சு வார்த்தை நகர முடியாது.இங்கே இந்தச் சொற்ப நுணுக்கமும் பேரளவிலும் நோக்காக முன் மொழியப்படவில்லை.திட்ட வரைவானது தமிழ் பேசும் மக்களின் பார்வைக்கு -அவர்களது நலனை எந்தெந்த முறைமைகளில் சட்டவரைவாக முன் மொழியப்பட்டதென்பதை "அந்த மக்கள்"அறிவதற்கும் எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.மக்களுக்காக,மக்கள் பிரதி நிதிகள் பேசுவதானால்-அந்த மக்களின் நலன்களை அந்த மக்கள் நோக்கு நிலையிலிருந்து தீர்மானிக்கப்பட்ட வரைவு புலிகளிடமுண்டா?ஏனெனில் ஈழம்-தமிழீழம் கோவிந்தா,கோவிந்தா!

மக்களின் நோக்கு நிலையிலிருந்துஅவர்களின் நலன்களை முதன்மைப்படுத்திய அரசியல் சமூகப் பொருளாதார முன்னெடுப்புகளையும்,அவர்தம் இதுவரையான இழப்புகளையும்,ஈடு செய்வதற்கான எந்தத் திட்டமும் இதுவரை வெளிப் பார்வைக்கு முன் வைக்கப்பட்டிருக்கா?
இல்லை,எதுவுமே முன்வைக்கப்படவில்லை.இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் சட்டவரைவுகள் அது முன்வைக்கும் மொழிவுகள் தமிழ் பேசும் மக்களின் அரசியில் பொருளாதாரச் சமூகப் பொதுவாழ்வை மையப்படுத்தித் தீர்மானிக்கப்பட்டதாக எந்தப் பொது மனிதரும் கருத முடியாது. இதைப்போலவேதாம் இன்றைய நிலையில் பேச்சு வார்த்தையென்பது வெறும் தந்திரோபாய முறைமைகளுக்காக நடப்பதாக யாரும் குறிப்பிட முடியாது.இப் பேச்சு வார்த்தைகள்தாம் இனிவரும் காலத்தில் தமிழரின் சமூக வாழ்வைத் தீர்மானிப்பவை.அத்தகைய பேச்சு வார்த்தையானது புலிகள் இயக்க நலனை முதன்மைப் படுத்தும் நகர்வாக அமையுங்கால் அது மக்களின் தீர்வுக்கான அரசியலை முன்னெடுப்பதற்கான தகமையை இழந்துவிடுகிறது.


மக்கள் தமது சமூக சீவியத்தைப் பெரிதும் அழியவிட்டுத் தகர்ந்த சமூக வாழ்வை அரைகுறையாக மீட்டு வாழ்ந்து,உயிரைப் பிடித்திருக்கும் இந்தச் சூழலில,; அவர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்கும்,அதை மீளக்கட்டியொழுப்பி அவர்களின் உயிர் வாழ்வை உறுதிப்படுத்தும் ஜனநாயகப் பண்புகளைக் கோரிக் கொள்ளவும்- குடிசார் மதிப்பீடுகளை நிறுவிக் கொள்ளும் குடியியல் முறைமைகளை நோக்கிய- இராணுவ,பொலிஸ் முகாம்கள் அகற்றப்பட்டு, வாழ்விடங்கள் மறுபடி மக்கள் வாழும் ஆதாரங்களாக நிறுவிக் கொள்ளும் முன் நிபந்தனைகளை இப்பேச்சு வார்த்தை மொழிவுகளாக்கிக்கொள்ள முடியாதிருப்பின், அது எதைப்பற்றித்தாம் பேச இலாய்க்கானது?தமிழ் மக்களின் தேசிய வலுவை,தேசிய அலகுகளைக்காத்துத் தேசிய முதலாளியத்தைக் காப்பதற்கான குறைந்தபட்ச பொருளாதாரத் திட்டம் உண்டா?தரகு முதலாளியத்தின் அடிவருடிகளாகக்கிடக்கும் அற்ப புலி இயக்க முதலீட்டாளர்களால் தமிழ் மக்களின் சுயநிர்ணயமென்பதை ஒரு போதும் காத்துவிட முடியாது.இது பேச்சு வார்த்தையில் எந்தத் தரப்பாலும் முன்வைக்கப்பட முடியாத மக்களின்,நாட்டின் ஆதாரப்பிரச்சனை.இதை வெறுத்தொதுக்கும் இயக்கத்தால,; பேச்சு வார்தையில் தமது இயக்க நலனைக்கூடக் காப்பது வெறும் பகற்கனவு.

தமிழ் ஈழம்:

தமிழீழம் என்றது பொய்க் கோசமானதென்பதை நாம் அன்றுதொட்டே நிரூபித்து வந்தோம்.இன்றும் கூறுகிறோம் இது புலிகளுக்கே இப்போது நகைப்புக்கிடமான கோசமாகியுள்ளது.ஈழம் என்பது சாத்தியமற்றதென்றும் அதற்கான உயிர்த் தியாகமானது முற்றிலும் தமிழ் மூலதனத்தைக் காப்பதற்கான முதிலீட்டுத் தமிழரின் நலனைக் காப்பதற்கான செயலென்றும் அன்றே கூறிக் கொண்டோம்.இன்றோ தமிழ் முதலீட்டாளர்கள் அன்றைய கென்பாம்,டொலர் பாம் நீதிராஜாக்களோ அல்லது மஸ்கன்,மகாராஜா,குணரெத்தினம்,சண்முகமோ இல்லை.மாறாகப் புலிகளே புதிய முதலீட்டாளர்களாக மாறியுள்ளார்கள்.அன்றையவர்களின் அரசியல் வெறும் சத்தியாக்கிரகம்,பாராளுமன்றக் கூச்சல்-வெளி நடப்பாக இருந்தது.ஆனால் இன்றைய முதலீட்டார்களிடம் விலைமதிக்க முடியாத எங்கள் இளைஞர்களின் மகத்தான தியாகம்,அற்பணிப்பு,உயிர்த்தியாகம்-ஆயுதமென்று இருக்கிறது.இவற்றைத் தமிழ் ஆளும் வர்க்கத்தின் ஒரு அற்ப ஆசைகளுக்காக-நலனுக்காக பயன்படுத்தும்போது மக்கள் வெறும் அழிவுக்கும்,அராஜகத்துக்கும் பலியாகிறார்கள்.இங்கே மக்களின் அனைத்து வழங்களையும் இராணுவ வலுவைக்கொண்டு கைப்பற்றிய தமிழ்த் தலைமைகள் மக்களை இன்னும் ஈழம்,இறுதிக்கட்டப் போரென்றபடி ஏமாற்றிப் புடுங்கிக் கொள்கிறார்கள்.இது புலம் பெயர் நாடுகளில்கூட தலைக்கு 2.000.யுரோ என்று புடுங்கப்படுகிறது.மறுக்க முடியாது மக்கள் இவைகளையும் கொடுப்பதற்குத் தயாராகிறார்கள்.காரணம் ஈழத்திலுள்ள தமது உடமைகளைப் புலியிடமிருந்து காப்பதற்கு இதைத் தவிர வேறு வழிகிடையாது, புலம் பெயர் தமிழருக்கு.
எனவே ஈழம் என்பது பொய்யான கோசம்.இது தமிழ் மக்களை இன,மொழி ரீதியாகக் கோடுகீறித் தமது நலனை முன் நிறுத்தும் தந்திராமாகத் தமிழ் முதலீட்டாளர்கள் இது வரை செய்வதை இனியும் உணராதிருந்தால் நாம் இழப்பது இன்னும் அதிகமாகும்.
சிங்களப் பாசிச அரசானது தமிழ் மக்களைப் புலிகளின் நலனைப் பாதுகாப்பதூடாகப் படுகுழியில் தள்ளுகிறது.இது உலக நாட்டின் ஒப்புதலோடு நகரும் செயலாக இதுவரை விரிந்து கிடக்கிறது.இதற்கு இன்றைய இலங்கைப் புதிய அரசானது மகிந்தாவின் தலைமையில் குறுக்கே நிற்கிறது.அதற்கான காரணமாகச் சீன-இந்திய நலன்கள் பின்னுந்துதலாக இருக்கிறது.இதன் தர்க்கவாதத் தன்மையால் புலிகளை மேற்குலகம் சற்று வளர்தெடுக்க முனையும்.அல்லது அதன் இருப்பைச் சற்று அதிகமாக்க விரும்பும்.எனவே மக்களின் இயல்நிலைக் குடிசார் வாழ்வு கானல் நீராகப் போகிறது.இது ஈழம் என்ற குருட்டுக் கோசத்தால் அனைத்தையும் சாதராணமாக்க முனையும்.

பேச்சு வார்த்தையென்பதைத் புலி இயக்கத்தின் நலனுக்கானதென்று மட்டும் நாம் எடுப்பதைவிட, அது உலக நாடுகளின் நலனை இலங்கையில் முன்னிறுத்துவது,செயற்படுத்துவது என்ற நோக்கு நிலையிருந்து அணுகவேண்டும்.

ஆசியக் கண்டப் பொருள் உற்பத்தி-வளர்ச்சி:

வளர்துவரும் சீன மூலதனமானது ஆசியாவில் பெரும் தொழில் வளர்ச்சியை எட்டுகிறது.இன்றைய நிலைவரப்படிச் சீனாவும்,இந்தியாவும் மாபெரும் பொருளாதார வளர்ச்சியையும்,நுகர்வாண்மையையுங் கொண்ட நாடுகளாக மாறி வருகின்றன.இருநாட்டின் குடிசனத் தொகையும், மிகப் பெரும் நுகர்வுச் சந்தையை உற்பத்தியாளர்களுக்குத் திறந்துவிடக் ;காத்திருக்கு.உலகில் கடந்தாண்டுவரை மேற்குலக நாடுகளே உற்பத்தியில் முன்னணி வகித்த நாடுகள்.அன்று உற்பத்தியில் 9ஆம் இடத்திலிருந்த சீனா இன்று 4ஆம் இடத்துக்கு வந்துள்ளது.இலண்டனைப் பின்தள்ளிவிட்ட சீனா, உலகின் இரண்டாவது இடத்தை ஜேர்மனியைப் பின் தள்ளிவிட்டு அடுத்தாண்டு நிச்சியம் அமெரிக்காவுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும்.அதன் இந்த வேகமானது 2010 இல் அமெரிக்காவைப் பின் தள்ளி முதலாமிடத்துக்கு வரும் அனுகூலம்தாம் உலகில் நிலவுகிறது.(இது ஜேர்மனியப் பொருளாதார வல்லுனர்களின் கருத்து.ஆய்வு: பைனான்ஸ்சியில் ரைம்ஸ் டிசம்பர்.2005)

இன்றைய முரண்பாடானது உற்பத்திக்கான வளத்திலிருந்து தொடங்குகிறது.சீனாவினதும் இந்தியாவினதும் அகோர எரிபொருள்,இரும்பு,மற்றும் அலுமனியப் பசிக்கு உலகில் அனைத்தும் மாற்றமுறுகிறது.கடும் வரிச் சுமை, மற்றும் விலை உயர்வுகள் உலகில் ஏற்படுகின்றன.இதன் தாக்கம் தொழிலாளர்களை வீட்டுக்கனுப்பும் நிலை மேற்குலக உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இங்கே அமெரிக்கா இன்னொரு புதிய தலிபான்களை இப்போது ஊட்டி வளர்க்கும் நிலை தோன்றுகிறது.அது தென் கிழக்காசியப் பொருள்வளர்ச்சியைக் குலைக்கும்,சீரழிக்கும்,மட்டுப்படுத்தும் விய+க்த்துக்கு அவசியமாகிறது.(W.D.Radio 5 ,Bericht vom 27.01.2006)இங்கே புதிய கூட்டுக்கள்,தாஜாக்கள்,கொடுப்பனவுகள்,கண்டிப்புகள்,

வெருட்டல்கள்,சலுகைகள் புலிகளுக்குக் காத்திருக்கிறது.அது ஜெனிவாவில் அரங்கேறும்போது புதிய பலமொன்று புலிகளுக்குள் புகும்.அங்கே பாரிய கோசமொன்று புதிய வடிவில் தோன்றும், அது மேற்குலப் பொருளாதார ஆர்வத்தைத் தென்கிழக்காசியாவில் தக்கவைக்கவொரு விய+கத்தைக் கொண்டியங்கும்.இது மக்களின் உரிமைகளை இன்னும் ஒடுக்கும்.இதற்கான ஒரு பேச்சு வாhத்தை மேற்குலக நாடொன்றில் நடப்பது இந்தப் புலிகளுக்குமட்டுமல்ல அமெரிக்க-ஐரோப்பியக் கழுகுகளுக்கும் அவசியம்.இதனால் தமிழ் பேசும் மக்களுக்கோ அல்லது அவர்களது அரசியல் அபிலாசைக்கோ எந்த வெற்றியுமில்லை.

ப.வி.ஸ்ரீரங்கன்
29.01.06


Tuesday, January 17, 2006

தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு...

தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு,
சில அபிப்பிராயங்கள்!

தனிநபர்களான ஒவ்வொரு மனிதரும் தமது விருப்புறுதியின்மீதான அதீதக் கற்பனைகளை,மதிப்பீடுகளை,சமூகப்பார்வைகளை வர்க்கஞ்சார்ந்த வர்க்க உணர்வாகப் பொருத்திவிட்டு"பொய்யான"உணர்வுத்தளத்தை நிறுவுவது திமிர்தனமான வெற்றுச் செயலாகும்.வர்க்கச் சமூகத்தில் வர்க்க அரசியலை முன்னெடுப்பதற்கான எந்தவொரு அமைப்பாண்மையுடைய புரட்சிகரக் கட்சியையும் இன்றைய நிதிமூலதனமும்,விஞ்ஞானமும் விட்டுவைக்கவில்லை.வர்க்கமென்றாலே என்னவென்றறிய முடியாதவொரு இரண்டுங்கெட்டான் சமுதாயமாக மனித சமூக வாழ்வு கட்டப்படுகிறது.இதுவரையான எல்லா மதிப்பீடுகளும் வரலாற்று இயங்கியல் போக்கில் வடிவத்தை உடைத்துவிட்டு உள்ளடக்கத்தையே முன் தள்ளுகிறது.இதன் பக்கவாட்டுக்கு எந்தச் சமூக இயக்கமும் கடக்க முடியாது.இது சமூக விஞ்ஞானத்தின் விதி.குறைவிருத்திச் சமுதாயங்கள்கூடத் தமது முரண்பாடுகளால் சமூக வளர்ச்சியை எட்டாது,திடீர்த்தனமான அந்நிய உந்துதலால் சமூகத்தின் வளர்ச்சியை பொய்யாக உந்தித் தள்ளுகிறது.எந்தவித வளாச்சியுமற்றவொரு நாடு இத்தகைய அத்துமீறிய தகர்வால் சமூகக் கட்டமைப்பின்மீதான அனைத்து அதிகாரங்களையும் திடீர்வரவான அந்நிய உந்துதலிடம் கையளித்துவிட்டு,சொந்த மக்களின் தேவைகளை நுகர்வுக்கான சந்தையில் பெற்றுவிடமுடியுமெனக் கனவுகாண்கிறது.உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தியுறவுகளுக்குமான "உறவின்மீதான"பழைய புரிதல்கள் இன்று செல்லாக்காசாக மாற்றப்பட்டுள்ளது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்டுள்ள இந்த உறவு குறித்தொரு கட்டத்தில் மக்களின் வாழ்வே அதன் தகர்வால் நாசமாகிவிடுமெனும் கருத்தியல் மனதை தினமும் உற்பத்தி செய்து புது வகை மனிதக் கூட்டைத் தகவமைக்கும், வர்த்தக சமுதாயமாக மனித நாகரீகம் விரிகிறது.



இந்தச் சூழலில்-காலவர்த்தமானத்தில் மனித சமூகத்தின் மீதான அதீத நம்பிக்கைகளும்,அந்தச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்மீதும் அளப்பெரிய பொறுப்பும் சுமத்தி,இந்த நம்பிக்கைமீதான மிகையான எதிர்பார்ப்புகள் எங்ஙனம் மனித சமூகத்தின் எதிர்கால வாழ்வுக்கு உடந்தையாக இருக்குமென்பதை நாம் வெறுமனவே நம்பிக்கைகளாக்கிச் செயற்படமுடியாது.இன்றைய மக்கள் சமுதாயமானது இருவேறு நோக்குகளை முன் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது.அது கடந்த கால மூலதனத்தைப் பெருக்குவது,காப்பதென்பதைத்தாண்டி,இன்று விஞ்ஞானத்தையும்,காற்றையும் மூலதனத்தினது இடத்துக்கு பெயர்த்தெடுத்து மூலதனத்தை வெறும் சூட்சுமமான இயக்கமாக்கியுள்ளது.இந்த அறுதியற்ற சுழற்சிப்போக்கை சமூகத்தின் அதிர்வில் பொருத்துகின்ற இன்றைய விஞ்ஞானத் திருவிளையாடல் மேன் மேலும் மனித சமூகத்தின் உழைப்பை வெறும் அர்த்தமற்றவொன்றாக்கிவிட்டு-உழைப்பை இன்னும் கீழான நிலைக்குள் தள்ளிவிட்டு சமூகத்தின் இருப்பைத் தகர்த்து-உழைப்பவர்களை வெறும் உயிர் வாழும் மனிதக் கூட்டமாக்கிறது.இதற்கான விஞ்ஞானத்தின் அதீத மனித மூளை உழைப்புத் தனது சக பிரிவை வெறும் அர்த்தமற்ற,செயலூக்கமற்ற பிரிவாக்கி அதைச் சந்தைப் படுத்தும் ஒரு உப தொழிலாக்கி"உழைபுச் சந்தையை"திறந்துள்ளது.


இங்கே தடுத்தாட்கொள்ளப்பட்ட மனித உடலுழைப்பு,விஞ்ஞானத்தின் முன் செல்லாக்காசாக மாற்றப்படுகிறது.இந்தவொரு சூழலின் தர்க்க நியாயப்படானது சமூகத்திலுள்ள அதி முக்கியமான உழைப்பின் செயற்றிறனை மனிதமற்ற ஜந்திரத்துக்குள் உயர்திறன் வாய்க்கும் படைப்பாற்றலாகக் காணுகிறது.இது நமது கடந்தகால அனைத்து நம்பிக்கைகளையும்,போராட்ட நெறி முறைகளையும் தூக்கித் தலைகீழாக்கி மாற்றியுள்ளது.சமூகத்தின் பொது உணர்வுத்தளமானது விஞ்ஞான சாகசத்தின் மிகையான நம்பிக்கைகளாக மாற்றப்பட்டு,வாழ்வின் எல்லாவகைப் பிரச்சனைகளையும் "அபிவிருத்தி-அறிவு" முன்னேற்றத்தின் முன்னால் தீர்த்துவிடமுடியுமெனுங் கோட்பாட்டுரூவாக்கம் நிகழும் தரணமான இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் தனிநபர் சார்ந்த மிகையான மதிப்பீடுகள் வலுவிழக்கின்றன!மனித இருப்பின்மீதான எதிர் தாக்குதலாகவிரியும் மனிதர்களின் மூளை,அந்த மூளையைத் தாங்கும் உடலை விவேகமற்ற வெறும் மாமிசப் பண்டமாகக் காண்கிறது.இது தன்னிருப்பின்மீதான உச்சமான எந்தக் கனவுகளையும் சிதைத்து,ஆத்மீக உறவுகளனைத்தையும் வெறும் சடங்குத்தனமான நகர்வுகளாக்கி விடுவதில் முனைப்பாக இருக்கிறது.


அர்த்தமற்ற தனிநபர் வாதங்களால் சக மனிதரை அழித்துவிட முனையும் கருத்தாடல்கள் எதிர் புரட்சிகரமாக மாற்றமுற்று,எதிரியிடம் கைகாட்டும் செயலூக்கமாக விரிவடைகிறது. இந்தக் கற்பனாவாதக் கனவுகளை புரட்சியின் மதிப்பீடுகளால் வர்ணமுலாம் ப+சும் அட்டகாசமான குறுங் கருத்தாடல்களாக மாற்றும் வெகுளித்தனமான இன்றைய சமூக விமர்சனம்,சமூகவிஞ்ஞானக் கட்டமைப்பை ஏலவே தகர்த்து அப்படியொரு விஞ்ஞானமே கற்கை நெறியாக இருப்பதற்குத் தகுதியற்றதாக்கி விட்டுள்ளது.இதை வலுவாக்கித் தொழில் சார் விஞ்ஞானத்தின் விருப்புகள்மீது குவிக்கப்படும் கவனம்,காற்றுவழித் தொடரும் தொடர்பாடல்களை எதிர்காலத்தின் உழைப்புக்கான மூல ஊற்றாக்கியுள்ளது.இதைக் கணிப்பிலெடுக்காது சமூகத்தைப் பற்றியும்,அதன் தகர்வுகளின் எச்சமாகவிரியும் அவ நம்பிக்கைகளையும் புரிவதில், சிக்கல்கள் எழுவதையொருவர் புரியாதிருப்பாரானால் அவரின் செயல் வீணாகிறது.அப்படியானவொரு சூழைலை எதிர்பார்த்திருக்கும் நிதி மூலதனமானது இத்தகைய தனிமனித வீராப்புக்களை வெகுவாக ஊக்கப்படுத்தி"அணிதிரட்சியையும்,கட்சிகட்டுதலையும்

"சிதைக்கிறது.சமூகத்தின் இயலாமையானது அந்தச் சமூகத்தின் உழைப்பின்மீதான ஒடுக்குமுறையின் அதீத வன்முறையில் முகிழ்கிறது.


இன்றுவரையான நமது புரிதல்களுக்கு நேரெதிராகக் காரியமாற்றும் விஞ்ஞானத்தின் "நுட்பவியல்கள்" பாரம்பரியமான உழைப்பின் மீதான சக்தி வாய்ந்த உறுதிப்பாட்டை உடைத்தெறிந்துள்ளது.உயிராதாரமிக்க உழைப்பைக் கேவலாமாக்கிவிட்டு,அதன் மையமான முரண்பாடுகளைத் தணிப்பதற்கான சாகசங்களில் நிதி மூலதனமானது விஞ்ஞானத்தைக் காவிக்கொண்டு உலகெங்கும் திரிகிறது.இந்த நிமிஷம்வரையான உலகின் விருப்பம்-ஆர்வம் உலக வளங்களை விஞ்ஞானத்தின் மூலமாகவே கட்டுப்படுத்திக் கொள்வதில் கவனத்தைக் குவித்துள்ளது.இத்தகைய சமூக உறவுகளில் எதேச்சையாக எதுவும் நடப்பதற்கில்லை.எல்லாமே ஒழுங்கமைந்த முறைமைகளால் திட்டமிடப்பட்டு உறிதிப்படுத்திய இந்தவுலகத்தில்,தனி நபர்களின் உதிரித்தனமான புரட்சிகரத் தன்னார்வக் கருத்தாடல்கள்-செயற்பாடுகளின் செயலூக்கமானது எதுவரை?இத்தகைய ஒரு சூழலையே விரும்பிச் செயற்படுத்தும் இந்த ஆதிக்க உலகம்,இந்த உலகத்தின் ஒவ்வொரு திசையிலும் புரட்சிகரமான கருத்துக்களையும்,அதைப் போராட்டத்தில் உள்வாங்கியும்,போராடும் மக்களுக்கள் கலந்து புரட்சிகரக் கட்சியின் தோற்றத்தை முளையிலேயே கிள்ளியெறிந்து வருகிறது.


எதையும் செய்ய இலாயக்கற்ற தொழிற் சங்கங்கள்,போலிக் கம்யுனிசக் கட்சிகள் பெரும் மூலதனத்தை முதலீடுசெய்து தொழிற்கழகங்களை-நிறுவனங்களைத் தாமே வழி நடத்துகின்றனர்.இத்தகைய தொழிற் சங்கம் வெறும் பொருளாதார வாதத்துக்குள் கடந்த 70 ஆண்டுகளாக மூழ்கிக்கிடக்கிறது.இத்தகைய கட்சிகளின்,தொழிற்சங்கங்களின் வர்ணமுலாம் ப+சப்பட்ட புரட்சிகரச் சவடால்கள் வெறும் கழிப்பறைக் காகிதங்களாகக் கிடக்கின்றன.இவர்களது அடி தொட்டு அலசப்படும் போராட்டச் செல் நெறியும்,யுத்த தந்திரங்களும் இந்தக் கொடூரமான உலகத்தை வெற்றி கொள்ளத் தக்க எந்தத் தகுதியுமற்றுக் கிடக்கும்போது,ஒவ்வொரு தனிநபர்களும் அதீதமான உணர்வெழுச்சிக்குள் சிக்குண்டு மிகையான கனவுகளை விதைப்பதில் காலத்தைக் கடத்துவது வெற்றிக்கான பாதையாகாது.


அறிவின்மீதான நம்பிக்கையானது எந்த அத்திவாரத்தில் கட்டப்பட்டதோ அந்த நம்பிக்கையானது இன்று நமக்குக் கை கொடுப்பதாகவில்லை.அந்த அறிவு மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பதில் தன் சூரத்தனத்தைக் காட்டுகிறது.நுகர்வுச் சந்தையின் இயலாமையை"வட்டியாக"அறவிட்டுக்கொள்ளும் மூலதனமானது முழுமொத்த பணச் சுற்றோட்டத்தையும் ஸ்த்தம்பிக்க வைக்;கிறது.இப்போது ஊக வணிகத்துறையானது இதன் பளுவைக் குறைப்பதற்கானவொரு முயற்சியில் தோல்வி கண்டு மக்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் யுத்தத்துக்கு இரையாக்கிவரும் சூழலுக்குள் மாட்டுண்டுகிடக்கும் நாம்,எம்மை மிகைப்படுத்திக்கொண்டு புரட்சி பேசுகிறோம்.இத்தகைய நிலையில்கூட நம்மால் ஓரணியில் திரண்டு அமைப்பொன்றை உருப்படியாகத் தோற்றமுடியவில்லை.கடந்தகால அநுபவங்களைச் சுகித்து,அதை வீரியமான விய+கமாக்க முடியாத நாம் தனித்தியங்கி எந்தவொரு செயற்கரிய திட்டத்தையும் வகுக்கப்போவதில்லை.எனினும் திடமாகப் பேசுகிறோம்!


மக்கள்தாம் வரலாற்றைப் படைக்கிறார்கள்.ஆனால் அந்த மக்களைக் காவுகொண்ட நவீன விஞ்ஞானமானது தனது சர்வ வியாபகத்தையும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதில்-ஒடுக்குவதில் வலுவாகச் செயற்படுகிறது.இந்தவுலகத்துக்குள் கிடக்கும்-சுத்தும் அணுவினுடைய இருப்பின்மீது கால்பதிக்காத மனிதவுணர்வினது இருப்புத்தாம் என்ன?விஞ்ஞானமா,அல்லது உபரி மூலதனமும் உற்பத்திச் சக்திகளுமா இன்று தனியுடமையின் பிரதான உடமையாகத் தோற்றுமுற்றுள்ளது.?-இங்கே யாருதாம் எதிரி? எங்கிருந்தோ ஆட்டுவிக்கும் சூத்திரதாரியைப் பற்றியும்,அந்தச் சூத்திரதாரியை உலகத்தின் முதல் தர எதிரியாகக் கண்டு,அதை எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடத்தும் அமைப்புகளே,அந்தச் சூத்திரதாரியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், புரட்சி பேசி எல்லாவற்றையும் மறுப்பதற்கும்(புரட்சியையொடுக்குவதற்கு) உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன?நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.மாறாக அவர்களையின்னும் அந்நியப்படுத்தி,புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது.இதுகூட இந்தவுலகத்தின் மூலதனப் பொறிக்குச் சாதகமாகவேயிருக்கிறது.


நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை,மனிதத் தன்மை,தனிநபர் சுயநிர்ணயம்,சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கப்படுகிறது.இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்"பெரும் காதையாடல்களெனும்"மேற்குலக அகண்ட கருத்தாடற் பன்மைத்துவம் மனிதர்களின் விருப்பத்தின்மீதான தெரிவானதைத் தனித்துவமென்கிறது.ஆனால் இத்தகைய விருப்புறுதிகளைத் தெரிவு செய்து,அதையே தனிநபரின் விருப்பாகத் தகவமைத்து வரும் இந்த அமைப்பின் கருத்தியல் பலமானது எங்கிருந்து தனித்துவத்தை முன்னெடுப்பதென்பதை எவரும் ஒருமித்த குரலில் தெளிவுப் படுத்துவதாகவில்லை.கருத்தியில் பன்மைத்துவமானது சிந்தனையின் சுதந்திரத்தைக் கோரிக்கொண்டாலும்,அந்தச் சுதந்திரத்துக்கான எல்லைகளையும்,வரைமுறைகளையும் "அடிமட்டத்தின்" நலன்கள் வரையறுத்துப் புதிய தலைமுறையை உருவாக்கிவரும் ஆதிக்கமானது,எங்கே சிந்தனைச் சுதந்திரத்தை விட்டுவைத்திருக்கிறது.ஒவ்வொரு தனிநபரும் தனது தனித்துவமென்பதின் உள்ளடக்கம் இந்தவகைக் கருத்தியல் தளத்தை மேவிக் கொண்டு,அதன் நகலாகத்தாம் இருக்கிறது.இத்தகைய நகல்களைப் பெரும் கருத்தாடலென்று பின்னியெடுக்கும் சிந்தனை மட்டம் தமக்குள் முற்றுமுழுதானவொரு காலச் சிதைவை வற்புறுத்துகிறது!


அவலத்தின் மீதான கண்ணோட்டம் மனிதமாதிரிகளை மறுத்துவிட்டு, சமூகத்தை வழி நடத்தும் புரட்சியின் முன் நிபந்தனைகளை வெறும் மொழிவுகளாக்கி வீம்பாக வெளிப்படுத்துகிறது,இன்றைய தனி நபர் முனைப்பு.இது சகல முனைகளிலும் தனது நியாயப்பாடுகளைச் சட்டதிட்டங்களை உள்வாங்கவேண்டுமென்றும்- ஒரே "வற்புறுத்தி ஏற்கவைக்க" முனைவது மிகவும் வருந்தத் தக்கது.வர்க்க உணர்வானது வெறும் கருத்தாடல்களால் நிர்மாணிக்க முடியாதது.அது தனது சமூக வாழ் நிலையால் தீர்மானிக்கப்பட்டு, உற்பத்திச் சக்திகளின் உறவோடு அது உணர்வுப+ர்வமாக உள்வாங்கப்படுகிறது.இத்தகைய உறவினால் தீர்மானிக்கப்படும் வர்க்கவுணர்வானது குறைவிருத்திச் சமூகத்தில் ஒரு மொன்னைத் தனமான இரண்டுங்கெட்டான் உணர்வாக நிலை கொள்கிறது.வளர்ச்சியுற்ற தொழில் வளமுடைய நாடுகளில் வர்க்கவுணர்வானது காட்டமாக மழுங்கடிக்கப்பட்டு"காயடிக்கப்பட்ட"மனிதக் கூட்டாகத் தொழிலாள வர்க்கம் வாழ்வைக் கொண்டு செல்கிறது.இத்தகைய நிலைமையில் புரட்சிக்கட்சியின் அவசியமானது என்றுமில்லாதவாறு மிக மிக அவசியமாக இருக்கும்போது-அத்தகைய கட்சியின் முகிழ்ப்பை மிக அவதானமாகக் கவனித்துவரும் உடமையாளர்கள் அப்படியொரு அமைப்பைச் சிதறடிப்பதற்காகப் பற்பல புரட்சிகரமான அமைப்புகளைப் பற்பல நலனை முன்னெடுத்து ஒடுக்கப்படுபவர் சார்பாகப் போராடத் தூண்டுகிறது.இத்தகையவொரு இருண்ட சூழலில் தனி நபர்களாகச் செயற்படும் வர்க்க உணர்வுமிக்கவர்கள் தமது ஊசாலாட்டத்தில் சோர்ந்து போவதும்,மேற்கொண்டு நகர்வதற்கான அமைப்பாண்மையற்றுத் தமக்குள்ளேயே ஒடுங்கிப் போவதும் வரலாறு ப+ராகவும் தொடர்கிறது.அன்றைய காலத்திலிருந்த செயற்பாட்டாளர்கள்,புரட்சியின் முன்னோடிகளின் சமூகச் சூழ்நிலை முற்றிலும் வேறானது.அந்தக் காலத்திலிருந்து நாம் எமது செயற்திட்டத்தை அல்லது ஊக்கத்தை நெம்பு கோலக்குவது பொருத்தமானதான தர்க்கமாக இருக்க முடியாது.


சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர்ர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே!சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது, நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.இது பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.இவர்களை நாம் ஓடுகாலியென்று கூவிக்கொண்டோமேயொழிய அதன் தர்க்கமான இயக்கப்பாட்டைக் கணிப்பதில் தவறிழைத்து வந்திருக்கிறோம்.இத்தகைய தவறுகள் பலரைப் போடுவதற்கும் உடந்தையாக இருக்கிறது.தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.


இத்தகைய வாழ் சூழலைத் தக்கப்படி ஏற்படுத்துகிற ஆதிக்க சக்திகள் மக்களின் முரண்பாடுகளை வெறும் சட்டவாதத்துக்குள் முடக்கி அவற்றைச் சரி செய்வதற்கான புதிய வரையறுப்புகளை"பொருளாதார அபிவிருத்தி"என்ற மாயாமானால் தீர்த்துவிட முடியுமெனப் பரப்புரை செய்து மக்களின் மனங்களை குளிர் நிலைக்கு மாற்றுகிறது.வளர்ச்சியடைந்த இலன்டன் போன்ற நகரங்களில் சமூக ஏற்றத் தாழ்வானது வெறும் சாதாரணமானவொரு நிகழ்வாக ஏற்றுக் கொள்ளும்படி ஆக்கப்பட்டுள்ளது.அங்கே சமூகப் பதட்டமென்பது குளிர் நிலைக்கு மாற்றப்பட்டதன் விழைவு,எந்த மானியக் குறைப்பையும், மக்கள் பெரிதாகப் போராடிக் காக்கும் வலுவை இழந்து இரண்டுங் கெட்டான் வாழ்வில் மூழ்கிப் போகிறார்கள்.இவர்ளைப் பற்றிய கணிப்பீடு என்ன?போராட முடியாத ஜடமாகப்பட்ட சூழலை நோவதா அல்லது ஒவ்வொரு தனி நபர்களையும் நோவதா? இங்கிருக்கும் அமைப்பாண்மையுடைய தொழிலாளர் அமைப்புகளின் நிலையோ தம்மைப் பெரு முதலீட்டாளர்களாக்கியவர்களுக்கு விசுவாசமாக வால் ஆட்டுவதில் மக்களைப் புறந்தள்ளுகிறது.


இப்படி உலக வளர்ச்சி நகரும்போது, ஆதிக்க சக்திகளோ இன்றைய சூழலைப் பயன்படுத்தி, புரட்சிகரமான அமைப்பைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுண்ணிகளைப் புரட்சிகர வாதிகளாக்கி ஒடுக்கப்படும் மக்களைக் காவு கொள்கிறது.இங்கே யாரு உண்மையாகப் பேசுகிறார்கள் என்பதே புரியாதிருக்கும்போது-எவரோடிணைந்து காரியமாற்றுவது,தோழமையைப் பெறுவது?உண்மையான புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டலற்ற தனித்தவொரு எந்த மனிதரும் தனது செயலுக்குத் தன்னையறியாமலே ஒரு எல்லையை வைத்திருப்பார்.அந்த எல்லை உணரப்படும்போது இதுகால வரையான அனைத்துப் பரிமாணங்களும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது.இத்தகைய சூழலில் அவநம்பிக்கையும்,இயலாமையும் சமூகத்தின் பொது எண்ணவோட்டமாக நிலைகொண்டு மக்களைக் காவுகொள்கிறது.சதா போராட்டத்துக்குள் வாழும் மனிதர்கள் எதிரியைப் புரிந்திருப்பினும்-அவர்களது போராட்டம் எதிரியிடம் சலுகைகளைப் பெற்றுத் தமது வாழ்வைச் செப்பனிடுவதாகப் போராட்டம் முடங்கிக் கிடக்கிறது.இதுவே இன்றைய ஆதிக்க சக்திகளின் விருப்பமும்கூட.


ப.வி.ஸ்ரீரங்கன்
17.01.2006








Sunday, January 08, 2006

இயற்கையும்,விடுதலையும்...

இயற்கையும்,விடுதலையும்...

பொதுவாக ஒரு வாழ்சூழலை மனிதர்களுக்கான வாழ்வுச் சுதந்திரமாக வரையறுக்க முடியுமா?புவிப்பரப்பில் உயிர்வாழ்வுக்கான அனைத்து முயற்சிகளையும் எல்லாவகை உயிரிகளும் தம்மால் முடிந்தவரை ஒரு வரையறைக்குள் உணருகின்ற இன்றைய பொழுதுவரை புவியின்மீதான இடைச்செயல் தத்தமது உணர்வினது மட்டுப்படுத்தப்பட்ட "அறிதிறனால்"செயலூக்கமாக விரிகிறது.வாழ்வாதரமற்ற பகுதிகளைவிட்டகலும் உயிரியானது தனது இருப்புக்காக இன்னொரு பகுதியைக் கண்டடையவேண்டிய நிர்பந்தம் சூழலால் தீர்மானிக்கப்படுகிறது.இந்தச் சூழலலைத் தீர்மானித்த இயற்கையானது வரலாற்றுப்போக்கில் வெகுவாகப் பாதிப்படைகிறது.மனிதரின் உயிர்வாழ்வுக்கான புவிமீதான இடைச்செயல் அத்தியவசியத்துக்கு மீறிய மட்டுப்படுத்தமுடியாத குவிப்புறுதிய+க்கத்தால் தொடர்ந்து இயற்கை வளம்,மனித வளம் அழிக்கப்படுகிறது.இதன் உச்சபச்ச நுகர்வ+க்கம் மக்களின் உயிர்வாழ்வைக் கேள்விக் குறியாக்கிவிடுகிறது.இத்தகைய நிலைமையில் இன்றைய மக்கள் சமுதயாங்களின் இருப்பானது எதுவரை சாத்தியமாகும்?

ஆபிரிக்கக் குடிகளும்,ஆசியக்குடிகளும் இப்போது எதிலிகளாகப்பட்ட நிலையால் இடம்பெயர்தல் தவிர்க்கமுடியவில்லை.அவர்கள் ஐரோப்பாவுக்கு உயிர்காக்கும் நோக்கில் அகதிகளாகக் குடியேறும்போது அதை ஐரோப்பா தடுத்து நிறுத்துகிறது.பாரிய கடற்பயணங்களைக்கூடத் துச்சமாக மதித்துத் தமது குழந்தைகளையாவது காத்திடத்துடிக்கும் மேற்கூறிய கண்டங்களின் மனிதர்கள் இடம் பெயர்கிறார்கள்.கடந்து பலநூற்றாண்டுகளாகக் கடல் கடந்து நாடுகள் பிடித்த ஐரோப்பியர் தமது நாட்டிற்கு உயிர்காத்திட வரும் அப்பாவி மனிதர்களை அநுமதிக்க விருப்பமற்றுக் கிடக்கிறார்கள்.உலகமெல்லாம் தமது இலாப வேட்டைக்காக மக்களின் உயிர்வாழ்விடங்களை நாசமாக்கும் ஐரோப்பியர்கள் தங்களால் அகதிகளாக்கப்படும் மனிதர்களை உடலியல்-உளவியல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தும் இன்றைய காலத்தில் மனிதவாழ்வின் உயர்வுக்கு என்ன செய்தாகவேண்டும்?எவரால்-எந்த மக்கள் கூட்டத்தால்-இனத்தால் நிம்மதியாக இருக்க-வாழமுடியும்?எந்தவொரு இனமும் அமைதியாக வாழும் நிலைகிடையாது!மூலதனத்தைத் திரட்டி வைத்திருக்கும் கூட்டம் தனது கொடூரமான குவிப்புறுதி நோக்கால் இந்தவுலகைச் சீரழிக்கிறது.

இந்தக் கேடுகெட்ட சமூக யதார்த்தமானது மனிதவுயிர்களைப் பலியெடுத்து எதிர்காலத்தை நாசமாக்கி வரும்போது தனித்த தேசங்களும் ,மக்களினங்களும் தமது சுயநிர்ணயமான அரசை,வாழ்வை,பொருள் உற்பத்தியைக் கொண்டிருக்க முடியுமா?தொடர்கின்ற இனங்களுக்கிடையிலான யுத்தங்கள் இறுதி இலட்சியத்தை அடைந்து மக்களை நிம்மதியோடு வாழும் அரசியல்,பொருளியல் வாழ்வைத் தருமா? இது சார்ந்து நாம் சிந்திக்கிறோமா?கற்பனைகளில் எவரும் அரசியல்,பொருளியல் வாழ்வைத் தீர்மானிக்க முடியாது.இன்றைய சூழலில் ஐரோப்பிய மக்கள் இனங்களே தமது தேசிய எல்லைகளுக்குள் பதட்டத்துடன் வாழ்வை எதிர்நோக்கும் பொருளாதார வாழ்வே அவர்களிடம் நிலவுகிறது.இத்தகைய நிலைமைகளை உருவாக்கி வரும் செல்வந்தர்களின் இலாபவேட்கையானது புவிப்பரப்பின் அனைத்து ஆதாரங்களையும் பணமாக்க முனைகிறது.நீர்,நெருப்பு,நிலம்,காற்று,ஆகாயம் எல்லாமே பணத்தால் தீர்மானிக்கப்பட்டு,விற்பனைக்கான பண்டமாக மாற்றப்பட்டுள்ளது!இதிலிருந்து எந்தத் தேசமும் தனது இறைமையைக் கொண்டிருப்பது சாத்தியமின்றிப் போனதன்பின் தனித்தவொரு இனத்தின் தேசியக் கோரிக்கைகள்தாம் என்ன?இதற்கென்றொரு அர்த்தம்தாம் உண்டா?இத்தகைய போராட்ட வாழ்வுக்கு இறுதி இலட்சியமாக மக்கள் நலன் முதன்மையடைந்திருக்கா?அத்தகைய நலனை முதன்மைப்படுத்தும் கட்சியை,அமைப்பை உலகச் செல்வந்தர்கள் சுயமாகச் செயற்பட விட்டுள்ளார்களா?இந்தச் செல்வந்தர்களின் ஆயுதத்தைவேண்டி, இவர்களின் முகவர்களான மூன்றாமுலக அரசுகளை ஓடுக்கப்படும் இனங்கள் வென்றுவிடமுடியுமா?சுயமான எந்தப் பலமுமற்ற இனக்குழுக்கள்,தமது போராட்ட அமைப்புகளால் இத்தகைய உலகக்கூட்டை உடைத்து மக்களின் இறுதிவெற்றியைத் தீர்மானிக்கும் சூழல்தாம் நிலவக்கூடியதா?


வெறுமனவே பிரேதேசவாரி, மொழிவாரி,மதவாரியாகக் கட்டியெழுப்பப்படும் மனித அடையாளங்களும்,மாண்புகளும் மனிதவுயிர்வாழ்வைக் காத்துவிடுமா?இந்தக் கேள்விகள் இன்று பலமாகக் கேட்பட வேண்டியதாகவிருக்கிறது.இயற்கைமீது கட்டியெழுப்பப்பட்ட வல்லாதிக்க ஆதிக்கமானது அந்தப் பொதுச் சொத்தைக் கொள்ளையிடும் பாரிய மனிதத் தேவையாக உணரப்படும் அதிகாரத் திமிராகவிரியும் ஒவ்வொரு தரணமும் மனிதவிரோதமாக விரிகிறது.இந்த நிலையில் பிரேதேசவாரி,மொழிவாரியடையாளமும்,மதவாரிப் பகுப்பும் மானுட வாழ்வை எந்தத் தளத்துக்கு எடுத்துச் செல்கிறது?

இஸ்லாமியப் பின்தங்கிய சமூகங்கங்கள் இன்றுவரை மனித இருத்தலைப் படுகேவலமாகச் சித்தரித்துவரும் நிலையில் அதன் வீச்சானது மக்கள் விரோத அரசியலாக முன்னெடுக்கப்படும் இந்தத் தரணத்தில் இந்த வாழ்வு அந்தப் பகுதி மக்களுக்குப் போராட்டமாக விரிகிறது, அந்த மதத்தின் எல்லைக்குட்பட்ட மனிதக்கட்டமைப்பில்.ஐரோப்பிய-அமெரிக்க நலனானது மத்திய கிழக்கில் இஸ்ரேலாகத் தோன்றியபோது இந்த வலயம் மிகக் கொடூரமான முறையில் இஸ்லாமிய மதத்தின் அடிப்படைகளை இன்னும் தூக்கிப்பிடிக்கும் நிலையை எய்தியது!இததாம் இன்றைய நிதிமூலதனத்தை அதிர வைக்கும் சங்கதியாகவும் இருக்கிறது.இத்தகைய சூழலில் மனித நடவடிக்கை சமூகத்தின் ஆன்மாவான மனிதாபிமானத்தைக் குழிதோண்டிப் புதைக்கிறது.இது தேசம் கடந்து எதேச்சதிகார உளவியலைச் சாதரண இஸ்லாமியர்களிடம் ஊன்றிவிடுகிறது.



Beantwortet eine junge muslimische Mutter so:
"Meine Tochter darf ohne Erlaubnis nach Israel fahren,um dort ein Selbstmordattentat zu begehen,die Klassefahrt darf sie aber nicht mitmachen."-Konkret 1/2006

ஜேர்மனியில் வதியுமொரு இளம் இஸ்லாமியத் தாய் பள்ளியில் படிக்கும் தனது பெண்பிள்ளையைப்பற்றி- அந்தப் பிள்ளை பயிலும் பாடசாலை அதிபருக்கு இங்ஙனம் பதிலளிக்கிறாள்:"எனது புதல்வி எங்களின் அநுமதியின்றி இஸ்ரேலுக்குச் சென்று அங்கே தற்கொலைப் போராளியாகத் தன்னை அழித்து இஸ்ரேலியர்களை அழிக்கலாம்.ஆனால் பாடசாலையால் ஒழுங்கு படுத்தப்படும் சுற்றுலாவுக்கு அநுமதியின்றிப் பங்குபற்ற முடியாது! ."

இத்தகைய மனம் யாரினால் தீர்மானிக்கப்பட்டது?

அமைதியாக உயிர்வாழவேண்டிய ஒரு இனம் இவ்வளவு கொடுமையாகக் "காய்யடிக்கப்பட்டு"வெறும் அராஜகக் காட்டுமிராண்டிகளாக வாழும் நிலையை யார் தீர்மானித்தார்கள்?

மேற்குலகத்தாரின் அதீத யுத்த நோக்கம் எண்ணையுலகை வெற்றி கொள்வதாக இருக்கிறது.இஸ்ரேலிய நாடு இந்த மேற்குலகத்தாரின்-அமேரிக்காவின் அடியாளகச் செயற்படும்போது அந்த இஸ்லாமிய மக்கள் தமது அரசியல் வாழ்வைத் தமது மொழிவழி,மதவழியாக நோக்குகிறார்கள்.அதைத் தீர்மானித்துவிடும் அடிப்படைவாத அரசியற் கட்சிகள்-இயக்கங்கள் தமது நலனை முதன்மைப்படுத்திவிட மக்களை அதற்கேற்ற வகையில் காய் அடிக்கிறார்கள்.

இன்றைய இஸ்லாமிய வாழ்சூழலோடு நாம் எங்ஙனம் ஒத்துப்போக முடிகிறது?

எங்கள் கோரிக்கைகள் என்ன?எமது போராட்ட வாழ்வு எத்தகைய அரசியல்,பொருளியல் வாழ்வையும்,அது சார்ந்த உலக நோக்கையும் தந்துள்ளது?நம்மிடமுள்ள உலக நோக்கு என்ன?எமது உள்ளத்தில் வடிக்கப்பட்டுள்ள வாழ்வின் மதிப்பீடுகள்தாம் எந்தத் திசையில் நம்மை அழைத்துச் செல்கிறது?இலங்கைத் தேசியயினங்களின் வாழ்வியல் மதிப்பீடுகளும், அவர்தம் வாழ்வும் இந்த இஸ்லாமியத் தாயின் கூற்றிலிருந்து வேறுபட்டதா,அவளின் ஒருவகைப்பட்ட"மனித மாதிரிக்கு"வித்தியாசமாகவா நமது மனிதமாதிரியுண்டு?இத்தகைய மனிதப் படுகொலைகளின்பின் நிகழ்வதென்ன?

காட்டுமிராண்டித் தனம்,பாலயில் பலாத்தகாரம்,கொலை,மனிதப் பெறுமானமற்ற உளப்பாங்கு!

இத்தகைய மனிதவுருவாக்கம் எந்தச் சூழலில் சகமனிதருக்கு,தனக்கு விடுதலையை நேசிப்பதாகவுணரும்?இத்தகைய மனித விழுமியத்தை உணரும் நிலையற்றவொரு மனிதவுயிர் விடுதலையை உணர்ந்துகொள்ளும்" தன்மீதான மனித நேசிப்பை"அகற்றிவிட்டு மக்கள் விடுதலையென்பது பொய்மையாக இல்லையா?

இன்றைய தமிழ் மக்களின் விடுதலையுணர்வானது எந்த மக்கள் விழுமியமுமின்றி,வெறும் மொழிவாரிக் கனவுகளாகவும்,அதற்காக யாரையும் பலி கொடுத்துவிடலாமெனவும் உணர்வதின் வெளிப்பாடு கொலைகளை,தனிநபர் பயங்கரவாதத்தைச் செயலூக்கமாக்கி விடுவதில் நம்மை ஊக்கப்படுத்துவது ஆரோக்கியமா?இது கிட்லரின்">>Du bist Deutschland<<"எனும் பாசிசச் சர்வதிகார மனிதனைத் தயார்படுத்தியதற்குச் சமனமாக இருப்பதையுணரமுடியாதா? ".


...Diese Hoffnung äusserte "Du bist Deutschland"Model Albert Einstein 1942,als er schon einige Jahre kein Deuscher mehr war und sein wollte.-Konkret1/2006

இத்தகைய நீயே ஜேர்மனியன்( தமிழ்ச் சூழலில்."நீயே தமிழன்-தமிழிச்சி",அல்லது துரோகி) அல்பேர்ட் ஐயன் ஸ்ரையினை நாசிசத்தின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது அவரை ஜேர்மனியானக் கருத அல்ல அங்ஙனம் இருக்க விடவில்லை.சில ஆண்டுகளாக இந்தப் பிரச்சனை அவரை ஆட்டிப்படைத்தபோது அவரை இந்தச் சூழல் அமேரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து போக வைத்தது.காரணம் அவரது டொச்சுக்கெதிரான நிலைப்பாடும் ,வெளிப்படுத்தலும் இத்தகைய சூழலில் இன்னுமவரை அந்நியப்படுத்துகிறது...இத்தகைய நடவடிக்கையானது நீயே டொச்சு நாடென்பதிலிருந்து மற்றைய இனங்களைப் போல போட்டியுடைய சர்வதேச வியாபகமாகிற...

ஆனால் நம்மிடமோ இத்தகைய மனிதவாழ்வின்மீதான கண்ணோட்டமின்றி,சமூக முரண்பாடுகளை வெறும் மொழிவழிக் காரணியளாகக் கருதும் தமிழ்மனம்-சிங்களமனம் எங்ஙனம் உருவாக்கப்படுகிறது?இந்த மனம் கட்டவிழ்த்துவிடும் உளவியற்பயங்கரம் மற்றைய மனிதர்களைக் கொல்வதில் எதேச்சையாக முடிவுகளை எடுக்கிறது.இந்தச் சமூகத்தில் ஒடுக்குமுறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இங்ஙனம் நாம் நம்மைத் தயார்ப்படுத்தும்போது நமது உண்மையான மனித்தத் தன்மை நம்மால் உண்மையாக உணரப்படும்.இது ஐயன் ஸ்ரையனுக்கு ஏற்பட்ட உள நெருக்கடியைப் போன்று நம்மை, நாம் உணரவும் மற்றவர்களை மதிக்கும் மனிதர்களாகவும்,விடுதலையென்பது ஓரியக்கம்-அமைப்புச் சார்ந்த விடையமில்லையென்பதும் புரியும்.மக்கள் இனங்களின் பரஸ்பர ஒத்துழைப்பின்றி எந்தவொரு தனித்துவமான இனமும் இனிமேல் விடுதலையடைய முடியாது.நமக்குத் "தமிழ்மக்கள் விடுதலையென்பது" சிங்கள மக்களின் ,இஸ்லாமிய மக்களின் பங்களிப்பின்றி எப்பவும் சாத்தியமில்லை.இத்தகைய போராட்ட நெறிமுறைமைகள்தாம் ஒரு நாடு இன்னொரு நாட்டினிடமிருந்து விடுதலைபெறுவதன்றி மாறாக உலகப் பயங்கரவாதச் செல்வந்தர்களிடமிருந்து புவிப்பரப்பிலுள்ள முழுமொத்த மக்களின் விடுதலையை-உயிர்வாழும் சூழலைப் பத்திரப்படுத்தி வாழ்வாதராத்தைக் காக்கும்.

இதுதாம் மக்களின் உயிராதாரமான இயற்கையைக் காத்து அதன் இருப்பை நிலைப்படுத்தி,உயிர்வாழ்வுக்கான ஆதாரமாக மீள நிறுவிக்கொள்ளும் தேவையைச் சாதிக்கும்.இயற்கையை அழிவுப்படுத்தும் போர்கள்,தொழில் முன்னெடுப்புகளைத் தவிர்த்துவிட்டு ஓரினமோ,அல்லது ஒரு பிரதேசமோ விடுதலையடையமுடியாது.இதை ஒவ்வொரு தமிழ் மனமும் புரிவது அவசியமில்லையா?

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
08.01.2006


***மழலையின் படத்துக்கு உரிமை வசந்தன்.அவருக்கு நன்றி!



மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...