Tuesday, May 31, 2005

கருப்பு நாசிகளும்,தமிழகமும்...

கருப்பு நாசிகளும்,தமிழகமும்...


>>>தமிழகத்தில் தமது அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தையும்,கேடுகெட்ட அதி வலதுசாரிய அரசியற் கருத்துக்களையும் பரப்பி மக்களைத் திசைதிருப்பிக்கொள்வது கேவலமானது.<<<



மண்ணின் மக்களுக்கே வேலை
ஈரோட்டில் எழுச்சி மாநாடு


வெளியாரை வெளியேற்றுவோம், மண்ணின் மக்களுக்கே வேலை என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில், ஈரோடு, கருங்கல்பாளையத்தில் 21.05.2005 அன்று பேரணியும், மாநாடும் நடைபெற்றன.

இராசேந்திர சோழன் தலைமையில் நடைபெற்ற பேரணி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
மாலை நடைபெற்ற மாநாட்டிற்கு ச.அர.மணிபாரதி தலைமை தாங்கினார். மாநாட்டில் பெ.மணியரசன், தியாகு, கி.வெங்கட்ராமன், கண.குறிஞ்சி, கோவை ஞானி, நாவைகறை, அ.பத்மநாபன், ஈகி.பெரியசாமி, சா.பேகன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

மாநாட்டில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொழி வழி மாநலமாகத் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நவம்பர் 1956க்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் வந்த வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்பது முதல் தீர்மானமாகும்.

வேலை இல்லாத தமிழ் இளைஞர்கள் வீதிகளில் நிற்க, மார்வாடிகளும், சேட்டுகளும், மலையாளிகளும் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தைப் பங்கு போட்டுக் கொள்வதைத் தடுக்கும் வகையிலேயே மேற்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் சொத்துகள் வாங்கத் தடை விதிக்க வேண்டும் என்னும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருநாடகத்தில் விளை நிலங்களைப் பிற மாநிலத்தவர் வாங்குவதற்கும், அடமானம் வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போல, காசுமீரீல் பிறர் சொத்து வாங்க ஏற்கனவே தடை விதிக்கப் பட்டுள்ளதைப் போல, தமிழ் நாட்டிலும் நிலை மாற வேண்டும் என்பதே மாநாட்டின் நோக்கமாக உள்ளது.

தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்பதும், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பதும் மற்ற தீர்மானங்களாகும்.

-www.thenseide.com



கருப்பு நாசிகளும்,தமிழகமும்...


நாம் இன்றைய பொழுதில் உலகெங்கும் பரந்து வாழும் நிலைமைகளுக்குள்-சூழலுக்குள் இருக்கிறோம்.அமெரிக்காவிலும் மற்றைய கண்டங்களுக்குள்ளும் நமது கல்வியாளர்கள் வேலைவாய்ப்புப்பெற்றுத் தமது தொழிலில் வருவாயைப் பெற்று வாழவேண்டிய நிலையில், நமது நாடுகளின் பொருளியல் நலனுண்டு.இதைவிட அந்நிய மூலதனத்தையும்,அவர்களது தொழிற் கழகங்களின் சுரண்டலையும் கைலாகு கொடுத்து வரவேற்கும் இந்த அரசியற் கட்சிகளும்,அக்கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தில் தமது அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தையும்,கேடுகெட்ட அதி வலதுசாரிய அரசியற் கருத்துக்களையும் பரப்பி மக்களைத் திசைதிருப்பிக்கொள்வது கேவலமானது.

வெள்ளையின நாடுகளில் அதியுச்சம்பெற்றுவிட்ட நாசிகளுக்கொப்ப- அவர்தம் அரசியற் பிரச்சாரக் கருத்துக்களைப் பரப்பும் இந்தக் கேடுகெட்ட பிழைப்புவாதிகள் தமிழர்களின் வாழ்வில் மண்ணையள்ளித் தூவும் கபடதாரிகள்.இவர்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் யாவும், ஜேர்மனிய நாசியக் கட்சிகளின் பாணியிலான வெற்று உள்ளடக்கத்தையும்,மாற்றினத்தைத் தூசிக்கும் கயமையையும் உடையது.இத்தகைய கடைந்தெடுத்த இனவாதச் சாக்கடையில் தியாகு,சுப.வீரபாண்டியன் போன்றோர் கிடந்துருள்வதுதாம் இன்னும் கேவலமானது.இப்போது இவர்களும் 'கருப்பு நாசிகளே'.

முன்பொரு காலத்தில் பேராசியர் சுப.வீ. இடதுசாரி வட்டத்தில் பெரிதும் மதிக்கப்பட்டவர்.தியாகுவோ தோழரென அழைக்கத்தக்க தியாகத்துக்குச் சொந்தக்காரர்,இவரது பங்களிப்பால் மூலதனம் தமிழாக்கம் பெற்று, தமிழ் வலிவடைந்துள்ளது.
இத்தகையவர்களை உந்தித் தள்ளிய இந்த இனவாத அரசியலின் கருத்துப் பரப்புத்தாம் என்ன?

இவர்கள்தம் கருத்தழிவு எங்ஙனம் நிகழ்ந்தது?

இன்றைய நிலைமைகளில் தமிழ்பேசும் மக்களின் வாழ்வில் இனவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் இத்தகைய கட்சிகள்-தலைவர்களின் நோக்கமானது வெறும் அரசியல் இலாபமாக இருக்கமுடியாது.இவர்கள் புரட்சிக்கெதிரான சக்திகளாக உருவாகிப் புரட்சிகர அரசியலை இனவாதச் சகதிக்குள் தள்ளிவிடுவது-தொழிலாளர்களுக்குச் செய்யும் துரோகம்.அந்நிய மூலதனத்தின் கைக்கூலிகளாக மாறும் இந்தக் கட்சித் தலைவர்களை தமிழர்களின் உரிமைவாதிகளாக நாம் இனம்காண முடியாது.இவர்கள் மாற்றினத்தைத் தமிழகத்தைவிட்டு வெளியேறென்பதும்,அவர்தம் கட்டுமானத்தைச் சிதைத்துவிடு என்பதும், கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.வேலைவாய்பே அற்ற தமிழகத்தில் 'மண்ணின் மைந்தருக்கே வேலை' என்பது ஐரோப்பிய நாசிகளின் குரலை தமிழகச் சூழலுக்குள் இடம் பெயர்த்தல்தாம்.


இன்றைய சூழல் மிகக் கேவலமானவொரு அரசியற் சூழலை உலகெங்கும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.இது இனவாதமாகச் சீரழிந்து மக்கள் நல அரசியல் முன்னெடுப்புகளுக்கு ஆப்பு வைக்கிறது.இத்துப்போன நாடாளுமன்ற அரசியலுக்குள் இந்த இனவாத அரசியல் செல்லப் பிள்ளையாக வளர்ந்து மக்களையின்னும் அடிமையாக்கும்.இத்தகைய அதிதீவிர வலசாரி அரசியலில் முத்தெடுக்கும் பலாபலன் அந்நிய மூலதனத்துக்கே கிட்டும்.அதற்காகத் தமிழகத்தில் பெயர்பலகைக் கட்சிகளும்,பெரும் கட்சிகளும் கங்கணம் கட்டிக் காரியத்தில் இறங்கும்போது-கைதுகளும்,போராட்டங்களும் மக்களைத் திசை திருப்பி வேறுவகைகளின் அரசியல் இலாபம் பெறுவதில் கவனத்தைக் குறித்துள்ளது.


அப்பாவி மக்களை மண்ணின் மைந்தர்களென்று பிரித்தாளும் கபட அரசியலுக்கு உடந்தையாகிய தியாகு,சுப.வீ.போன்றோர் மனிதவுருவிலுள்ள வெடிக் குண்டுகளே!மண்ணின் மைந்தர்கள்(!?),இன்றைய நிலையில் மனிதரெவரும் சொந்த இடங்களில் வரலாறு பூராகவும் வாழவில்லை.எல்லோரும் அந்நியர்களே!நமது மூலத்தைத் தேடும்போது அஃது ஆபிரிக்காநோக்கி இரத்தவுறவைக் கூட்டிவரும்.

அற்ப பிழைப்புவாத அரசியலுக்கு திரு.நெடுமாறன் ஐயாவும் பலியாகியது துர்வதிஷ்டமே.

இவர்களை இனியும் மௌனமாக அங்கீகரித்தால் தமிழர்களின் தேசிய அடையாளமே கேலிக்கூத்தாகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
31.05.05

Saturday, May 28, 2005

கருத்தியல்-கலாச்சாரத் திணிப்பும்,

கருத்தியல்-கலாச்சாரத் திணிப்பும்,அதன் வினைகளும்.-சிறு குறிப்பு.

"Krieg
Eine Lehre
Ein neuer Soldat"-Loch Sommer.

ஒரு புதிய சிப்பாய்க்கு யுத்தமொரு பாடமாகும்.- லொக் சமர்.

இஃதொரு ஐரோப்பிய அரசியல் ஆய்வாளனின் கருத்தாகும்.ஒவ்வொரு களமும் ஒரு படிப்பினையைச் சேர்த்தபடி உரமிடும் புரட்சிகரப்போராளிக்கு.முதலாவது உலக மகாயுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தின் தொகை 41.257.000.இவர்களில் 5.570.000.சிப்பாய்கள் உயிரிழந்தார்கள்.இத்துடன் ஆறுமாத காலத்திற்குள் ஆறு இலட்சம் சிப்பாய்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தொழிந்தார்கள்.மொத்தமாக இழக்கப்பட்ட மக்கட்டொகை 8,9 மில்லியன்கள்.

இரண்டாவது மகாயுத்தத்தில் இழக்கப்பட்ட மக்கட்டொகை 55-60 மில்லியன்கள்.

இதன் விளைவுக்குக் காரணமான நாடு ஜேர்மனியும்,பழைய ஐரோப்பிய மையவாதச் சிந்தனையும்,மூலவளத்தேவைகளுமே!

இப்போது இவ் ஐரோப்பிய ஆயுதங்கள் மொளனமாகவிருந்த அறுபது ஆண்டுகளை மறந்துவிட்டு,கிழக்கைரோப்பிலும்,மத்திய கிழக்கு நாடுகளிலும் மொளனம் கலைக்கின்றன.

1945'க்குப்பின்பு இந்தப் பூமிப்பந்தில் 164 முழு அளவிலான யுத்தங்களும்,72 சிறிய யுத்தங்களும் நடந்துவிட்டென! இவ் யுத்தங்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பலவும் ஐரோப்பாவின் வருவாயைக் கூட்டிவருகின்றன,அமெரிக்காவின் நலன்களைக் காத்து வருகின்றன.இவ் வண்ணமே இந்தியஇலங்கையின் ஆளும் வர்க்கங்களின் நலன்களை, இலங்கையால் நடாதப்படும் 'தமிழ்பேசும் மக்கள்' மீதான அரசியல்-இராணுவ ஒடுக்குமுறை யுத்தம் காத்து வருகிறது.

இதுதாம் 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தின் கதையாக நம்முன் நீண்டுவிடுகிறது.

இந்த நிலையில், 21 ஆம் நூற்றாண்டின் காலவர்த்தமானங்களை மிக எளிதாகவூகித்தறிதல் அவ்வளவு இலகுவான காரியமில்லை.அதுவும் சராசரி மனிதர்களாகி நமக்குக் கடினமாகவே இருக்கின்றது.

உலகு தழுவிய வர்த்தக வலைப்பின்னல்-இருக்கும் கொஞ்சநஞ்ச உணர்வறிதலையும் காவுகொண்ட நிலைவேறு,நம்மைக் கொத்தடிமைகளாக்கி விட்டபடி.இது நமது பாரம் பரிய அனைத்துத் தேசியத் தன்மைகளை,தேசிய 'அலகுகளை' கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பியபடி.இங்கே மூன்றாமுலக,வளர்முக நாடுகளின் வர்த்தகக் கூட்டானது தனது கேவலமான கூட்டுக்களால் மேலைத்தேசங்களின் நலனுக்கேற்றவாறு தமதும்,தமது மக்களின் மொழிகளைக் காவுகொடுக்கின்றன.இதற்குக் கருணாநிதி குடும்பம்,ஜெயா குடும்பம்,பண்டாரநாயக்க-மற்றும் நவலோகா,உபாலி குடும்பங்கள்(இவை தமிழ்-சிங்களச் சூழலில்) கங்கணங்கட்டித் தமது வருவாயைக் காப்பது கண்கூடு.

இத்தகைய செயற்பாட்டால்-வாழ் சூழலால் எஞ்சியிருக்கும் அரசியல் பிரக்ஜைகூட மூளையிலிருந்து துடைத்தெறியத்தக்க பலவழிகளில் இவர்கள் செயற்படுவது அப்பட்டமாகத் தெரிவதும்,அதையெதிர்க்கத் திரணியற்ற தமிழ் அமைப்புகள் வெறும் சினிமாவுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கும் போரில் தமது காலத்தையும் நேரத்தையும் விட்டபடி.இவர்கள்கூட மொழிசார்ந்து, கோடுகிழித்து பொருளாதார-அரசியல் நலன்களையடைய முனைப்பாகின்றனர்.முன்னெப்போதையும்விட இன்று நமது தேசிய அலகுகளைக் காப்பதற்கான போராட்டம் அவசியமாகிறது.அதைக் கட்சியரசியலானது தனது நலனுக்கும்,அந்நிய நலனுக்கேற்றவாறும் கையகப்படுத்தி ,ஒரு கட்டத்தில் நீர்த்துப்போக வைக்கத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இதன் வெளிப்பாடே பாட்டாளி மக்கள் கட்சியினதும்,உதிரி அறிஞர்களினதும் போராட்ட வடிவங்கள்.இவை நகைப்புக்கிடமான போராட்ட வடிவமானதாகும்.இத்தகைய போராட்டங்களை உலக வங்கி-உலக நாணய நிதியங்கள் நடாத்தும்படி கட்டளையிட்டுக் காத்து,உந்துதல் கொடுக்கின்றனர்.நிசமாக நடைப்பெறப்போகும் போராட்டைத்தை முளையிலேயே கிள்ளும் நரித்தனம் இதற்குள் நிலவுகிறது.இவ் உள்நோக்கம் திடீர்த் தலைவர்களை உருவாக்கித் தமிழரின் தார்மீகத் தலைவர்களாக்க முனையும் அந்நிய நிதி மூலதனத்தின் சூழ்ச்சியாகும்.

எனவே தமிழ்பேசும் மக்கள் இந்தவகைப் போராட்டங்களையும்,கபட அரசியல் முன்னெடுப்புகளையும் இனம் கண்டு, மக்கள் சார்ந்த போராட்டங்களைக் கட்சியரசியலிலிருந்து பிரித்தெடுத்துப் நாமே முன்னின்று போராடும் அமைப்பு மன்றங்களைக் கட்டவேண்டிய வரலாற்றுத்தேவைக்குள் இருக்கிறோம்.தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புதிய வடிவங்களில் இந்த வகைப் போராட்ட உளவியல் ஊடுருவியிருப்பது மிக,மிக வஞ்சகத்தனமானது.இந்தச் சதிவலையை இனம் காண்பதும்,நாம் நமது தேசியவாழ்வையும் வரலாற்றையும் காத்துக்கொள்வதும்-அதனூடே நம் மொழியைக் காத்துக்கொள்வதும்,நமக்கான இருப்பை நிலைப்படுத்தும் தேசிய அடையாளத்தை மீட்பதும் நம் ஜீவாதாரவுரிமையாகும்.

இந்தவுரிமை ஒவ்வொரு ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கும் உண்டென்பதை முதலாளியக் கட்டமைப்பே உதட்டளவில் ஐ.நா.வில் ஒத்துக்கொண்டுள்ளது.இதைக் கருத்தியல்வழியில் அது அழிப்பதற்குச் செய்துவரும் சதிவலைகளே ஏராளமாக இன்று நடைபெறுகின்றன,அதிலொன்றே ஊடக வன்முறை.இது மக்களின் மனங்களில் அற்ப ஆசைகளைத் தூண்டிவிட்டு வெறும் பொருளடிமைகளாகவொரு படித்த கூட்டத்தைத் தகவமைக்கிறது.இத்தகைய கல்(ல)விசார்-துறைசார் அறிஞர்கள் தமிழ்வழிக் கல்வியை மறுப்பதும்,ஆங்கிலத்தை மாற்றீடாக்க முனைவதும்-இன்றைய வர்த்தகச் சமுதாயத்தின் சமூக உளவியற் கட்டமானத்தின் வெளிப்பாடாகும்.இதை மறுப்பவருக்கு உலக வர்த்தகக்கழகங்களின் அரசியல் கடுகளவும் புரியவில்லையென்பதே வெளிப்படையான விமர்சனமாகும்!

இந்த வர்த்தகச் சமுதாயம் இதுவரை செய்துவரும் வன்முறைசார் போர்கள்,மென்மைசார் கருத்தியற் போர்கள் யாவும், பொருளாதார ஆர்வங்களினது வெளிப்பாடே!இவர்கள்தாம் இன்றைய சமூக உளவிலைத் தமக்கேற்றவாறு கல்விவழித் தோற்றிவைத்துள்ளார்கள்.நமது கல்விமுறையானது பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியப் பாணியிலான முறைமைகளைக் கொண்டவை.இது கொலனிய-நவகொலனியப் பொருளாதாரத்துக்கேற்றவாறியங்கும் சதியுடைய முறைமையாகும். இதன் வழி கல்வியூட்டப்பட்ட இன்றைய கல்வியாளர்களுக்கு மொழிசார்ந்த மதிப்பீடுகள் முக்கியமற்றவையே.இந்தக் கல்வியானது தொழிநுட்பத்துக்குக் கொடுக்கும் முன்னுரிமையை சமூக விஞ்ஞானத்துக்குக் கொடுப்பதில்லை.இங்கே சமூகவிஞ்ஞானமானது வெறும் பிற்போக்கு முறைமையிலாகக் கற்கைநெறிகளைத் தாங்கியுள்ளது.மன்னர்களினதும்,மதவாதிகளினதும் வரலாறுகள்-மகிமைகளே சமூகவியற் கல்வியாக வழங்கப்படும்போது,இன்றைய அறிவாளிகள் சரியான அரசியல்-சமூகப் பொருளாதாரச் சிந்தனையற்ற ஜந்திரங்களாக மாற்றப்படுகிறார்கள்.இவர்களிடம் நுட்பவியலை எதிர்பார்க்கலாமே தவிர,மக்கள் சார்ந்த-சமூகஞ்சார்ந்த அறிவியல்போக்கை எதிர்பார்க்கமுடியாது.இந்தவகையிற்தாம் இவர்களால் வெறுக்கப்படும் தாய்மொழிக் கல்வி-போராட்டங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டுமேயொழிய அவர்களை எதிரிகளாகவல்ல.அவர்கள் வெறும் அம்புகளே!இவர்களை சமூக விஞ்ஞானக் கல்வியால் நாம் எதிர்கொண்டு தாய்மொழி காத்தலை, தேசிய அலகுகளைக் காத்தலைப் புரியவைப்போம்.

தாய் மொழி சிதைந்து,எந்த வேருமற்ற வெறும் மனிதக் குழுவாக நமது இனம் உருவாகுவது ஏற்க முடியாது.இன்றுவரையும் ஜிப்சியின மக்களின் நிலையை நாம் காண்கிறோமல்லவா?அவர்களை நாயிலும் கேவலமாக்கொன்று குவித்த ஐரோப்பிய அரசுகளைக் கண்டோமல்லவா?ஜிப்சிகளினது நிலையை நாமும் வெகு சீக்கிரமாக அடையப்போகிறோம்.

இன்றைக்கு எமது நிலைமையை ஒரு திரைப்பட இயக்குனரின்-வசனகர்த்தாவின் பார்வையில் பார்ப்போம்:

கேள்வி:ஈழப்போராட்டம் இவ்வளவுதூரம் கடுமையாக இருக்கிறதே?-ஆ.வி.நிருபர்.

பதில்: அங்கு(ஈழத்தில்) பொழுதுபோக்குச் சினிமா இல்லை,எனவேதாம்!-பஞ்சு அருணாசலம்(1990 இல்).

இது யாருடைய குரல்?

ஆளும் தரகு முதலாளியத்தின் குரலாகும்.இதைச் சொல்ல வைப்பது உலக வங்கியின் அதிகார வர்க்கமாகும்!இவர்களின் அறிவுஜீவிக்குரல் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியாக வரும்.இந்த வகைக் குரல்கள் ஜிம்மிக் காட்டாரை,புஷ்சை பெருமக்களாகச் சொல்லும்.

எனவே,சமூகச் சூழ்நிலைமைகளை மிகவேகமாக எடைபோடுகின்ற எதிரிகள், எப்பவுமே கவனமாகத்தாம் இருக்கின்ற 'சமுதாய நிலைமைகளை' வரலாற்றில் நாம் கண்டுகொண்டே வரலாம்.இந்த நிலைமைகளை நமது இன்றைய பொருள் வாழ்வில் புதிய பல ஊடகங்களுடாய்க் கண்டுகொள்ளலாம்.

இந்த நிலையில் ,உலக மூலதனத் திரட்சியானது தனது உற்பத்திச் செலவை மிக மிகக் குறைப்பதற்காகவும்,மூலவளத் திருட்டுக்காகவும் நமது நாடுகளின் இறைமைகளைக் காவுகொள்ள, நம் நாடுகளில் தோன்றியுள்ள அதிகார வர்க்கத்தைப் பயன் படுத்துவதால்,அவர்கள் தமது எஜமானுக்கேற்றுவாறு நமது மனங்களைப் பண்படுத்தப் படாதபாடு படுகிறார்கள்.இதனால் புதிய புதிய செய்தியூடகங்கள் நம் மத்தியில் திடீர் திடீரெனப் பிறக்கிறது.இத்தகைய ஊடகங்கள் முதலில் தமது நாட்டினது மக்கள்தம் இருப்பையே அசைத்து,அவர்களை வெறும் நுகர்வுக் கூட்டமாகவும்-கலாச்சார அடிமைகளாக்கவும் முனைவதால்,அந்த மக்களின் ஆன்மாவோடு உறவாடும் நினைவிலி மனதின் மொழியை நோக்கி அம்பு எய்கிறார்கள்.இந்த ஈனத்தனம் அவர்களது பாரம்பரிய நம்பிக்கைகளைச் சிதைத்து,சமூக அவநம்பிக்கையை முதலில்தோற்றிவிடுகின்றனர்.இதன்பால்தோன்றும் சமூகச் சிதைவானது அந்நிய மூலதனமின்றி-அந்நிய ஒத்துழைப்பின்றி நாம் வாழமுடியாதென்ற உளவியலைத் தோற்றித் தமது நோக்கங்களை மிக இலகுவாக மூன்றாம் உலகில் அடைந்துவிடுகிறார்கள்.இந்த இழி நிலைமை தேசிய இன அடையாளத்தையே சிதைத்தெறிந்து, நம்மை வெறும் இனக் குழுவாகததோற்றி வைக்கமுனைவதில் வெற்றியீட்டிவருவதனாலேயேதாம் நாம் நமது மொழிவழிக் கல்வியை-மொழியை கேவலமாகச் சித்தரிக்கின்றோம்.

இவற்றையிங்கு இருவழிமுறைகளில் எதிரிகள் செய்து முடிக்கிறார்கள்.

ஒன்று: கலாச்சார அடிமைப்படுத்தல்.

இரண்டு: திரிவுப்படுத்தப்பட்ட சமுதாயச் சூழ்நிலைமையை உருவாக்கி, வரலாற்றைச் சிதைத்தல்-தேசிய அடையாளத்தை இல்லாதொழித்தல்.

இவ்விரு வடிவங்களுமே இருவேறு வகைப்பட்ட முறைமைகளில் நம்மைத் தாக்குகின்றன.இவையிரண்டும் பாரிய முறையில் நமது வாழ்வையும்-இருத்தலையும் காவுகொள்கின்றன.

நீண்ட காலமாக நாம்- நமது நலனின் பொருட்டு சிந்திக்கும்போதெல்லாம் அவை நிர்மூலமாக்கப் பட்டுள்ளன.தமிழ்பேசும் மக்களின் வரலாற்றில்-அவர்களையேமாற்றி வரலாற்று ரீதியாக அடிமைப்படுத்திய அரசியல்-சமூக ஒடுக்குமுறைகளை நாம் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாது.

அனல்வாதம்,புனல்வாதம் என்ற போர்வையில் எம் வாழ்வையும்,வரலாற்றையும் திருடிய சாணாக்கிய தந்திரம் மீண்டும் புத்துணர்ச்சிபெற்று,ஊடக வன்முறையாகப் பரணமித்து தமிழ் மொழியை ஆங்கிலம் கலந்தழிக்க முனைதல் தற்செயலான விளைவல்ல.இதற்கு உறுதுணையாக அகண்ட பாரதக் கனவும்,இந்தி-இந்து-இந்தியாவும்,உலக வர்த்தக நலனும் ஒருங்கே கைகோற்கிறது.இந்தக் கூட்டு நமது உயிர் வாழ்வைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.இவர்கள் கோடம் பாக்கத்தை தமது முதல் ஆயுதமாக்கி,ஊடகங்களுடாய் இப் போதையை நம்மீது தூவியபடியே எம்மை இலகுவாகத் தாக்கி,நம் மூளையைச் சலவை செய்து-எதற்கும் உதவாத கலாச்சார அடிமைகளாக்கவும்,பலவீனமான சமூகமாக்கவும் மிக நுணுக்கமாக திட்டமிட்டுள்ளார்கள்!

இனி மேற் சொன்ன யுத்தங்களை எண்ணிப் பாருங்கள்! இவையாவும் வெள்ளையினம் தனது பொருளியில் இலாபத்துக்காகச் செய்த போர்கள்.இவற்றால் தமது மொழிவழியுரிமைகளையும்,பொருளியற் பலத்தையும் தக்கவைத்தவர்கள் மீளவும் புதிய வகைப்போர்களால் நம்மைக் காவுகொள்ள நாம் இடம் கொடுத்தல் நியாயமாகுமா?

ப.வி.ஸ்ரீரங்கன்
29.05.05

Monday, May 16, 2005

தமிழ் ஊடகயுத்தமும்,தமிழர் உரிமையும்!

தமிழ் ஊடகயுத்தமும்,தமிழர் உரிமையும்!


எதைப்பற்றிப் பேசாதுபோனாலும் பரவாயில்லை.ஆனால் ஈழத்தமிழரின் உயிர்வாழ்வுக்காக-அவர்களது வாழ்வுரிமைக்காக,நாம் கருத்தாடாது மௌனித்திருப்பது கேவலமானது!

எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்கள் வாழும்போது, சுனாமிவேறு தன்பங்குக்கு அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தைத் தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் தமிழ் அரசியல் கிரிமனல்கள் 'பொதுக் கட்டமைப்பு' என்றும்,அதைத் தத்தமது தேவைக்கேற்றவாறு அரசியல் விடையமாகக் குறுக்கி அரசியல் செய்வது,'எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம்'என்பதுபோல் இருக்கிறது. அப்பாவி மக்கள் அழிவுயுத்தால் தமது வாழ்விருப்பிடங்களையிழந்து,உயிரையிழந்து-உடமைகளையிழந்து,அகதிகளாக இடம்பெயர்ந்து வாழும்போது-அவர்களுக்கெந்த உதிவிகளையும் செய்யமுடியாத போக்கிரி இயக்கங்கள், 'சுனாமி உதவித்தொகையை' பங்கீடுசெய்து தமது பணப்பெட்டிக்குள் திணிக்கப்படும்பாடோ பெரும் ஊடகவன்முறையாக விரிந்துள்ளது.

தரங்கெட்ட இயக்கங்களே! தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச பொருளாதாரவலுவையும் உங்கள் தேவைக்கேற்றவாறு காசாக்கிய கயமையை மறைத்து,இப்போது பொதுக்கட்டமைப்பில் பன்முகத்துவ கட்சிகளின் பங்கை வலியுறுத்தும் நீங்கள், மக்களின் உயிர்வாழ்வின் அதிமுக்கியமான வாழ்விடங்களைச் சிங்களஆதிக்க ஜந்திரம் அதியுச்சப்பாதுகாப்பு வலையமாக்கி, இராணுவச் சூனியப் பிரதேசமாக்கிவைத்துள்ள அவலத்தைப்பற்றி பேசாது- சுனாமி உதவித் தொகைகளைப் பற்றிக் கருத்தாடுவது நியாயமா?சுனாமிக்கோரத்துக்கு மக்களது உயிர்கள் மோசமாகப் பலியாகியது.இந்த மக்களின் உடல்களைக் கும்பல் கும்பலாகப் புதைத்த கையோடு, அவர்களது நியாயமான வாழ்வியிற்றேவைகளோடு அரசியல் நடாத்தி இலாபமிடமுனையும் தமிழியக்கிரிமினகள், இப்போது நம்மைக் கேவலமாக கருத்தியல் வன்முறையால் சிதைக்கிறார்கள்!

எதற்காக?

இந்த ஊடக வன்முறை இவ்வளவுமோசமாக விரிவுறுவதன் நோக்கமென்ன?

ஐரோப்பாவிலின்று பற்பல புதிய வானொலிச்சேவைகளும்,புதிய தொலைக்காட்சிச்சேவைகளும் புலம்பெயர்ந்த தமிழ்பேசும் மக்கள் மத்தியில் தோற்றப்பட்டு மக்களைக் குழப்பியெடுக்கும் காரியத்தில் தமிழர் நலனை மறுக்கும் சக்திகள் முயல்வது நமது சாபக்கேடா?பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி. புளோட் கும்பல்கள் ஒரு புறமாகவும்,புலிகள் ஒருபுறமாகவும் 'பொதுக்கட்டமைப்புக்கு' உரிமைகூறி பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல்,மிகக் கேவலமானதாகும். இந்தப் பிழைப்புவாதக் கிரிமினற் கும்பல்கள் இப்போது மக்களிடம் கொள்ளையிட்ட பணத்திலும்-அன்நிய நாடுகள் கொடுத்த பணத்திலும் புதிய புதிய வானொலிச்சேவைகளைத் துவக்கி மக்களின் உரிமைகளுக்கு வேட்டு வைக்கும் காரிமானது மன்னிக்கமுடியாதது!இது, நமது மக்களை அன்நியச் சக்தியிடம் பேரம்பேசி விற்றுப் பிழைப்பு நடத்தும் அரசியலாகும்.காரணமேயின்றி ஒருவரும் வானொலி வானொளிச் சேவைகளை ஆரம்பிக்கவில்லை.எல்லாமே தமிழரின் உரிமைகளை ஏகாதிபத்தியங்களிடம் விற்றுத் தமது நலன்களையடைவதற்கே முனைவதுதாம், இந்த ஊடகவன்முறையின் நோக்கம்.

மக்களே! பல்லாயிரம் உயிர்களைத் தியாகஞ் செய்தவர்கள் நாம்.

நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அன்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி.இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள்.டக்ளஸ் தேவாநந்தனோ அல்ல ஆனந்த சங்கரியோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அன்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் ஜனநாயம்,சுதந்திரம்,சுயநிர்ணயவுரிமையென்பதெல்லாம் வெறும் பூச்சுற்றலாகும்.

ரீ.ரீஎன், ஐ.பி.சி, ஐ.ரி.ஆர், தீபம், வெக்டோன், புலிகளையும்-ரி.பி.சி, இதயவீணை வானொலிகள் டக்ளஸ் தேவாநந்தனையும் அவரது அடிவருடிகளையும் நியாயப் படுத்தும் ஊடகங்களாக 'நமக்குள்' கருத்துக்களைக் கொட்டுகிறார்கள்.மக்களாகிய நாம், அகதிவாழ்வைத் தொலைத்து,நமது தாயகத்தில் அமைதியான அரசியல் வாழ்வை முன்னெடுக்க முடியாத சூழலையிந்தக் கேடுகெட்ட வன்முறையாளர்கள் தோற்றிவைத்துக்கொண்டே, தமது அரசியலை நமக்குள் திணிப்பது விபச்சாரத்தனமானதாகும்.

நமது வேதனைகள் இவர்களுக்குப் பணம் ,பதவி தரும் பெரும் அரசியல் வியூகமாக மாறுகிறது.நம்மிடம் அறவிடப்பட்ட-சேகரிக்கப்பட்ட பணமே அவர்களது பிரச்சார ஊடகங்களைத் தூக்கிநிறுத்தும் பொருளாதார அடிப்படையாக மாறுகிறது.இவர்களது அரசியலில் நாம் மந்தைகளாக மாறுவதும்,அவர்களை'மாட்சிமைதாங்கிய' மனிதர்களாக மதித்துக் காவடியெடுப்பதையும் இனியும் தாங்கிக்கொள்ள முடியாது.இத்தகைய பரப்புரைகளை நாம் ஜனநாயகத்தின் குரெலென்று கூறிக்கொள்வோமென்றால், நம்மை நாமே புதைகுழிக்குள் புதைப்பதாகும்.எந்தவொரு அமைப்பும் நமது மக்களின் சுய அமைப்பாண்மையை விரும்பவில்லை.இவர்களெமை ஆணிவேறு அக்குவேறாகப் பிரித்தெடுத்து, தத்தமது நலனுக்காய்ப் பயன்படுத்தத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இந்தத் தரணத்தில் தமிழ்பேசும் மக்களின் நலன் என்பதெல்லாம் தத்தமது அரசியல் இருப்பையும்,பதவிகளையும் நோக்கிய வாதங்களாகும்.

சிங்கள பௌத்த சியோனிஸ ஆட்சியாளர்களுக்கு உடந்தையாகவும்,அன்நிய மூலதனத்துக்கும் அதன் எஜமானர்களுக்கும் கூஜாத் தூக்கிகளாக மாறிய அனைத்து இயக்கங்களும், ஒருபோதும் நமது மக்களுக்கு விடுதலைக்குரிய போராட்ட வடிவங்களைத் தரப்போவதில்லை.இவர்கள் தமது நலனுக்கேற்றவாறு நம்மைப் பயன்படுத்தும் வியூகத்தோடு ஊடகவன்முறையிலீடுபடுவதை, நாம் இனம் கண்டு,நமது பரிபூரணமான விடுதலைநோக்கிய 'புதியஜனநாயகப் புரட்சிக்கு'பங்களிக்க நமது கருத்தியல் நிலையை வளர்த்தெடுப்போம்.இதற்காக நமது அகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு,இந்தப் பயங்கரவாதப் புனைவுகளை வேரறுப்போம்!

காலத்துக்கு முந்தியபோராட்ட வடிவங்கள் நம்மைக் காவுகொள்வதாகும்.

நமது வாழ்வு இனியும் அழிந்து போகாதிருக்கவும்,நமது சமூக உயிர்வாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகாதிருக்கவும், நாம் யுத்தங்களையும்,ஏமாற்று அரசியலையும் மறுப்போம்.

அடிப்படை மனிதவுரிமைகளுக்காகவும்,ஜனநாயகத்துக்காகவும் மக்களாகிய நாம் இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தோடும் கைகோர்த்து இந்த அரசியலை அம்பலப்படுத்தி, நேர்மையானவர்களை அரசியலரங்குக்குக் கொண்டுவருவோம்.இவர்களுடாய் குறைந்த பட்ச அடிப்படையுரிமைகளையாவது பெறுவதற்குப் போராடி,அதன் வாயிலாக அடுத்தகட்டத்தைத் தாண்டமுனைவோம்.இந்த தேவைகளை வலியுறுத்தும் புலிகளோ அல்ல மற்றெந்த இயக்கங்களோ ஜனநாயகபூர்வமாக இதுவரை காரியமாற்றத் தவறுவது எதனால்?

பழைய பெரிச்சாளிகள், மானுடவிரோதிகள்-யுத்த தாசர்கள்,அரசியல் கிரிமினல்கள்,இன்னபிற பிழைப்புவாதிகள்-கொலைகாரர்களால் பரப்புரையாக்கப்படும் அரசியல் கருத்துரைகள், எம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.இந்தக் கொலைக்காரர்கள் ஜனநாயகம்,பன்முக அமைப்புகள்,மனிதவுரிமைகள் என்ற மிக,மிக அழகான முகமூடிகளோடு நம்மையணுகிறார்கள்,இது நம்மையின்னும் ஏமாற்றிக்கொள்வதற்கே!நாடறிந்த நயவஞ்சகர்கள் நல்ல மனிதர்களாம்,வரலாறு தந்த மணிமகுடங்களாம்.இப்படிப்போகும் ஊடகப்பரப்புரைகள் நமக்கு விடுதலையல்ல மரணத்தையே தந்துவிடும்.டக்ளஸ் தேவாநந்தன் என்பவன் தமிழரின் சாபக்கேடன அரசியலின் சகுனி.

இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது.புணம் தின்னிகளான இந்த ஆயுததாரி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.டக்ளஸ் தேவாநந்தா என்ற பயங்கரவாதியும்,புலிகளும் இப்போது நடாத்தும் அரசியலில் நமது மக்களின் நலன்கள்தாம் பலியாகிவிட்டது!இந்தியவோடுசேர்ந்து இலங்கையும்,இந்த மக்களின் (தமிழ்பேசும் மக்கள்) உரிமைகளைச் சிதைத்து, எம்மை நிரந்தரமாக அடிமைக்கூட்டமாக்கி விடுவதில் அதன் வெற்றி,இந்தக் கேடுகெட்ட அரசியலால் உறுதியாகிவருகிறது.

நாமோ அகதிகளாகி,அடிமைகளாகிச் செத்துக்கொண்டிருக்கிறோம்.இந்தக் கிரிமினல்களோ பணத்துக்காக-பதவிக்காக நம்மைக் கருவறுத்தபடி...

'....................'


ப.வி.ஸ்ரீரங்கன்
16.05.05

Thursday, May 12, 2005

தொழிற்றுறை விரிவும்,மனிதவதையும்!

தொழிற்றுறை விரிவும்,மனிதவதையும்!


இன்றெமது காலத்து உயிர் வாழ்வானது உயிர்த்திருப்பதற்கான நோக்குநிலையாக மாறியபின்> நமது வாழ்வூக்கம் அதுசார்ந்த உணர்தலை சமூகமட்டத்திலும்,அறிவத்தளத்திலும் உறுதியாகப் பதியம் போட்டுவிட்டது. இந்தப் பொருள் வாழ்வானது நமது இருப்பைக் குறுகிய மதிப்பீடுகளால்(இன்றைய வாழ்வியல் மதிப்பீடுகள்)அன்நியப்டுத்தியபோது,நமது வாழ்வு விலங்கிடப்பட்டு ' இருப்பழிந்த-உளமிழந்த' நிலையாகிப் போனதால் ஜந்திரத்தனமானோம். இப்போதெல்லாம் வாழ்வினது பெறுமானம் நிம்மதியான வேலையும்,அதைத்தக்கவைப்பதற்கான விடாமுயற்சியுமே மனித வாழ்வினது பெருநோக்கில் முக்கியமான பெறுமானம்! எந்தவொரு சூழலிலும் இந்த வகைப் புரிதலோடுதாம் நமது உயிர்வாழ்வு இருப்பை உறுதிப் படுத்துகிறது.இதன்போக்கு தொழில்சார் கல்வியின் தேவையை உந்தித் தள்ளி,அறிவுப்பரப்பை ஊனப்படுத்தியதாக மாற்றியுள்ளது.


பண்டுதொட்டு ஆத்மீகத்தேவையைச் சிதைத்து மலினப்படுத்திய மதங்கள்-பொருளியல் நலன்கள் மனிதர்களின் மனித முகத்தைப் பறித்தெடுத்துவிட்டு,ஜந்திரத்தின் உதிரிப்பாகமாக மனிதர்களை அத்துடன் இணைத்துவிட்டுள்ளது.இதுதாம் நமதான இன்றைய வாழ்வும்,அதன் பெறுமானமும்!இதிலிருந்து விடுபடக்கூடிய வழிவகைகளைக் கல்வியிலிருந்து தொடக்கி வைக்கக் கல்வியும் மானுடர்சார்ந்த நோக்குநிலையிலிருந்து பயிற்றுவிப்பதாகவுமில்லை.அதைக் கட்டுப்படுத்தும் பெருமூலதனம் தனது இருப்கேற்றவாறு கல்வியைத் தயார்படுத்தி,ஒழுங்கமைந்த தொழில்சார் முறைமைகளுக்கே முன்னுரிமை கொடுப்பதால் நமது எதிர்காலம் இன்னும் அமைதியிழந்தும்,ஆறுதலின்றியும் போகப்போகின்றது.மனித முகமிழந்த வெறும் ஜந்திரத்தனமான உணர்வுகளோடு மனிதர்கள் சமூகக்கடமையிலீடுபடுவது எதைநோக்கி? உற்பத்தியிலீடுபடுவதும்,பெருமூலதனம் உபரியீட்டுதலுக்காகக் காரியஞ் செய்வதுதாம் வாழ்வின் பெறுமானமா?


நேற்று ஊரோடு வாழ்ந்த வாழ்வு பறிபோனது.


இன்று உடலோடு உயிர்த்திருப்பதுகூட முடியாதவொரு சூழலைத் தந்துள்ள நமது பொருளாதாரப் பொறிமுறை,இனிப் பெரும்பாலும் பூமியில் மானுட வாழ்வுக்கேற்ற பகுதிகளை இல்லாதாக்கிவிடும்.நர்மதா அணைக்கட்டு,மின் திட்டங்கள்-எண்ணையூற்று வயல்கள்,இன்னும் எத்தனையோ கனிவளச் சுரண்டல்களுக்காக மானுடமற்ற திட்டங்கள் நம் வாழ்வைச் சிறப்புறச் செய்யப்போவதில்லை.இந்த இருள்சூழ்ந்த வாழ்வில் எப்படியொரு நம்பிக்கை முகிழ்த்து, எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும்?பிரிடிஷ் பெற்றோலியம் நையீரியாவில் செய்யும் அனியாயக் காரியம் அந்தப் பகுதி மானுடர்களின் வாழ் நிலங்களை நஞ்சாக்கி மக்களின் இருப்பையே அழித்துக் கொண்டிருக்கிறது.


இந்தியாவிலோ பாரிய ஏகாதிபத்தியத் தொழில் நிறுவனங்கள் தமது வேட்டையைத் தொடங்கி நமது பக்க வாழ்சூழலைக் கெடுத்து வருவது தொடர்கிறது.மனித இனம் வாழ்வதற்காக இடம் பெயர்ந்த காலங்கள் போய்,இப்போது தொழிற்கழகங்கள் தாம் உயிர்த்திருப்பதற்காக இடம் பெயரும் காலம் இன்றைய காலம்.இங்கே அனைத்து மனிதவிழுமியங்களும் சிதைக்கப்பட்டு உருத்தெரியாது அழிக்கப்படுகிறது!நமது அறிவுஜீவுகளும் தமது பொன்னான அறிவை இந்தக் காட்டுமிராண்டித் தொழில் கழகங்களுக்கே வழங்கி நமது வாழ்வையின்னும் மோசாமாக்கிவிட்டார்கள்.


1993 இல் தொடங்கி இன்றுவரை தென்கிழக்காசிப் பிராந்தியம் அன்நியக் கம்பனிகளால் வேட்டையாடப்பட்டு வருகிறது.
இந்தியத் துணைக்கண்டம் தனது வாழ்சூழலைத் தொழிற்கழகங்களுக்காக ஏலம்விட்டு மனிதவதையைச் செய்தத் தொடங்கியுள்ளது.
இதனால் யுத்தங்கள்,அரசியற்கொலைகள்,அமைதியின்மை,
சமூகப்பதட்டம்,
இராணுவமயப்படுத்தலாகக் குடிசார் வாழ்வு அழிந்துபோகிறது.நாமெல்லாம் வாழ்விழந்தோம் வாழ்வதற்காய்!வாழ்வுதாம் கிட்டவில்லை,வதைபடுகிறோம்.எதிலுமே ஆதாயம்தேடும் ஐரோப்பிய மனம் எமது காலத்தை தொழில் கழகங்களின் உயிர்ப்புக்கான காலமாகமாற்றியுள்ளது.இங்கே மனிதர்கள் வெறும் கச்சாப்பொருளே.
இதனால் வதைபடுகிறோம்.வார்த்தையிற் சொல்லமுடியாத வேதனைகளை அகதி வாழ்வு தந்துவிடுகிறது.உற்றார்களில்லை,உறவில்லை,சுற்றமில்லை,
சூழலில்லை.
எங்கே போய் வாழ்வின் சுகத்தைத்தேடுவது?யாரோடுபோய் எதைநோக?நமக்கான குறியீடென்ன? அகதி! அற்புதமான காலம் அவதியோடும்,அழுகையோடும்போவதா?


எதைநோக்கி?...


மனித்தைநோக்கி மதங்கள் காட்டிய பாதை அடிமைத்தளையைத் தந்தது.முன்னேற்றம் காட்டிய பொருளாதாரமோ உயிர்ப்பலியைத் தந்தது.
ஆன்மாவின்றி அவதிப்படும் உலக மனிதர்கள் அங்கம் வகிக்கம் பொருளாதாரப் பொறிமுறை அழிவைநோக்கித்தாம் செல்லுமேயொழிய அற்புதங்களைச் செய்யமுடியாது. வர்த்தக ஒப்பந்தங்கள் வதைகளையே தந்துவிடுகின்றன,வரும் காலமெல்லாம் மனித அழிவின்றி வளமான வாழ்வு வரப்போவதில்லை.


அழிந்துதாம் ஆக்கமானல்,மனிதத்தோடு வாழ்வதற்கு-எல்லோரும் சமமுற ஏதுசெய்வோம்?...

ப.வி.ஸ்ரீரங்கன்
13.05.05

Saturday, May 07, 2005

புனைவுகளும்,இறையியல் தன்மைகளும்!

புனைவுகளும்,இறையியல் தன்மைகளும்!


நமது மொழிக்குள் வந்து சேர்ந்த புனைவுகளுக்கு இறையின் வாயிலான மதிப்பீடுகளை கற்பித்து,அவற்றைக் கேள்விக்கிடமற்ற அமரத்துவப் படைப்புகளாக்க முனைந்த அரசியல் நோக்கங்கள்-இன்றும் புதிய வகை மாதிரியான ஏமாற்று வித்தைகளை சூழலின்பால் தள்ளி விட்டுப் படைப்பாளியை வெறும் ஊடகமாக்கும் கண்ணிகளைக் கொண்டியங்குகின்றன.படைப்பாளி செத்து,படைப்புப் பற்றிய புரிதலைவேண்டிக் கொள்வது ஒரு வகையான அரசியலில் மையங்கொண்ட மேற்குலகச் சிந்தனைதாம்.வடிவம் செத்து உள்ளடக்கமே உந்தித் தள்ளும் இயங்கியல் விதியைக் கொச்சைப் படுத்தும் கருத்துமுதல் வாதியான நீச்சேயின் கால மதிப்பீட்டின் பிறிதொரு வகையான புனைவுதாம், இந்தப் படைப்பாளியைக் காப்பாற்றும் ஒற்றைத் துருவ இலக்கியக் கொள்கை- நமது காலத்தினது அவசியத்துக்குள் வெறும் மதிப்பீடுகளில் காலத்தைக் கண்டு கொள்வதில் மையங்கொள்ள முடியாது.காலத்தில் வாழாத மானுடத் தேவைகள் மக்களின் நலனினது விழுமியமாக இருக்க முடியாது.எனவே இந்தப் பெரும் கதையாடல்கள்-மனிதக் கதையாடல்களாக இனிமேலும் விருத்தியுற முடியாது.இந்நோக்கில் பழமையான நமது புனைவுகளைக் கட்டுடைத்தல் அவசியமான பணிதாம்.மாற்றத்தை வேண்டியவொரு மனித வாழ்வு அனைத்தையும் மாற்றியே தீரும்.

மறுத்தலின் வரட்டுத்தனமான விருப்புறுதி கணித்துக்கொள்ளத்தக்க எந்தப் புறநிலை மாற்றத்தையும் மொளனமாக உதாசீனப் படுத்துவதில் முன்நிலை வகிப்பதிலும்,அதன் தொன்மைமிக்க கருத்துநிலைத் தர்க்கத்தாலும் புதியவகைப் புரிதற்பாட்டினது கட்டுடைப்பின் மீதான மறுதலிப்பையும்-அதன் தன்னுணர்வுமிக்க ஒற்றைத்துருவ வியாக்கியமான கருத்துநிலை தாண்டா திடசங்கற்பத்தாலும் தனதிருப்பின் மூலத்தையுறுதிப்படுத்தும் மனநிலையைத் தோற்றுவிக்கும் மாதிரி மனித்தேவைகளை -பெரும் பரபரப்பின் வாயிலாக் கொட்டி வைத்திருப்பதில் இதுகாறும் நிலை நாட்டும் அறிவின்மீது. இந்தத் தளத்தின் மீது எவரொருவர் அறிவார்ந்த தேடலையிட்டுக் கொள்ள முனைந்தாலும் அந்தத் தேடல்மீதான எதிர்போக்கான மறுதலிப்பின் வினையாற்று குறிப்பிட்வொரு தளத்தில் தன் தர்க்கத்துக்குமாற்றான கருதுகோளை -அதன் உச்சபச்ச நிராகரித்தலூடாய் இருப்பிழக்கத்தக்க பனுவல்களாக மாற்றவதிலும்,குறுகிய மனத்தளவான மதிப்பீடுகளின் மாதிரிகளைக் கொண்டு வெற்றிடத்தை நிரப்புதலில் இதுகால வரை காலத்தைக் கடத்திவருகிறது.


எந்தவொரு துறைக்கும் பொத்தாம் பொதுவான,முடிந்த முடிவான திட்ட மாதிரி வடிவமுமில்லை.காலத்தால் யாவும் மாற்றமுறும்.நியூட்டனின் அரிய
கண்டுபிடிப்புகளானாலும் சரி,அன்றி வியக்கத்தக சமூக விஞ்ஞானக் கட்டங்களும் சரி மாற்றமுற்றே தீரும்.இன்று மெய்யாகியிருக்கும் தளம் நாளை பொய்யாகிப் போவதொன்றும் இந்த மனித வாழ்வுக்குப் புதியதல்ல.இந்த விஞ்ஞான விளையாட்டுகளுக்கே இந்தக் கோலமென்றால் நமது புராண இதிகாச மௌன வாசிப்புகளுக்கு மட்டும் பொருந்தாத் தன்மையான திடவுறுதி நிலைத்திருப்பது தர்க்கத்தின் நியாயப்பாட்டிற்கு பொருந்தாத அதி மத்திமமான சமூக உளவியலாகும்.இந்தத் தளத்தின் மீதான மறு வாசிப்பென்பது அதன் உள்ளார்ந்த படிமங்களில் நிலவும் சமூக்தன்மைகளின் அறை கூவல்களை புதிய வீரியமான சமுதாயத்தின் தேவைகளோடு ஒப்பிட்டுக் கொள்வதும்-மாதிரி வகைப்படுத்தலுக்குமான சமூகத்தேவையின் அவசியத்தின் அதீதநோக்கமாகும்.

இந்த மானுடத்தேவை மனித வாழ்வினது சகல தளங்களிலும் சாத்தியமானவொரு புதிய நிலையை எடுத்துவிடுவது தவிர்க்கமுடியாது.காலகாலமாக கேள்விக்கிடமற்ற படிமங்களை,பனுவல்களை கடைந்தேற்றும் காரியமொன்று புதிய மாதிரிக் கூறுகளாக மாற்றமுறுவது நமது இதுகாலவரையான அறிவார்ந்த இலக்கியப் பரப்புக்கு பசளையாக இருக்கும்.இதன் பாலான கட்டுடைப்பு அவசியத்தை மறுதலிக்க முனைதலானது இலக்கியத்தை வெறும் உணர்வுத் தளத்துக்குள் உந்தித் தள்ளுவதாகும்.உயிர்புமிக்க கலை மரபுகளாக வளரவேண்டிய இந்தத் தமிழ் இலக்கியத் தளமானது வெறும் உணர்ச்சிகளினது கோர்வைகளாகவும்-மொழி விளையாட்டாகவும் குறுகியுள்ளது.இந்தக் காலத்தின் புதிய தேவைகள் இலக்கியத் தளத்தின் மீது பண்புரீதியான மாற்றத்தைக் கோரிநிற்கின்றன.இவற்றின் தேவைகளை மறுதலிக்கும் எந்த எழுத்து வடிவமானாலும் சரி அது மானுடவிரோதமான தளத்தைத் தாம் உறுதி செய்யும்.

கலையிலக்கியத்தின் அவசியமான புரிதற் பாடு நமக்கான-நமது மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்கி,அதன் வாயிலான புதிய மாதிரி கருத்தமைவுகளை,சமூக மதிப்பீடுகளை-வாழ்வின் பெறுமானங்களை மீளுருவாக்கஞ் செய்தல் கடந்த கால அடிமைத்தனங்களை களைவதற்கான முன்னெடுப்பின் முகிழ்ப்புத்தாம்.எனவே இது தவிர்க்க முடியாத காலத்தின் அவசியமான பணி.பண்டுதொட்டு வாசிப்புக்குள்ளாகிய மரபுசார்ந்த மதிப்பீடுகளையுருவாக்கிய நமது இதிகாச-புராணப் புனைவுகளால் நாம் மனவளர்ச்சியற்றவொரு கூட்டமாகவே இருக்கிறோம்.இன்றும் நமது பழமைவாய்ந்த மதிப்பீடுகளால் மனிதத்தைக் குற்றுயிரோடு மரணப்போராட்டத்துக்குள் தள்ளியுள்ளோம்.இந்த இலக்கிய மரபு வெறும் மொழிவிளையாட்டின் பிரிக்க முடியாத கற்பனைக் களஞ்சியமாக இருப்பது நவீன இலக்கிய விஞ்ஞானத்துக்கு புறம்பானது.சமூகத்தின் விருப்புறுதியானது அதன் உயிராதாரமான மனித விழுமியத்தைக் கொண்டியங்கக்கூடிய மறுவார்ப்பைக்கோரி நிற்கின்றது.இதைத் திடகாத்திரமான முறையிற் வளர்த்தெடுப்பதும்,வீரயிமிக்கதான- அறிவார்ந்த,மக்கள்சார்ந்த தேவைகளுக்கு வித்திடக்கூடிய படைப்புகளைக் கொண்டிருக்கக்கூடிய தளத்தை நிறுவுதலே இலக்கியத்தின் பணியாக உள்ளது.

எந்தவொரு சமுதாயமும் தனது மதிப்பீடுகளை இன்றைய நோக்கு நிலையிலிருந்து மீளுருவாகஞ்செய்யாதுபோனால் அதன் இருப்பானது மிக மிகப் பலவீனமான நிலையையெய்துவிடும்.இன்றைய காலமானது மிகவும் கெடுதியான பொருளியல் நலனே முக்கியம் பெற்ற அதிர்வான சமூக சீவியத்தைக் கொண்டிருக்கும் காலமாகும்.இது மனித வாழ்வைச் சிறைப்படுத்தி-சிண்டெரேல்லா பாணியிலான சமூக அடிமைத்தனத்தைத் தந்துள்ளது.இதைத் தகர்ப்பதற்கு சிண்டேரேலாவுக்கு உதவிய புறாப்போன்று நமது இலக்கிய முன்னெடுப்புகள் அமைவது சாலச் சிறந்தது.இதன்பொருட்டு பழமையான நமது மதிப்பீடுகள் தகர்வதும்-மீளுருவாக்கங்கொள்வதும் தவிர்க்க முடியாதவொரு சமூகக் கடமையைக் கொண்டிருக்கிறது.எனவே கூட்டுணர்வுமிக்கவொரு மனிதப் பண்பையும்,கௌரவமான நேசிப்பை வலியுறுத்தும் அழகியல் மதிப்பீடுகள் நமது இலக்கிய வடிவங்களுக்குள் வந்தாகவேண்டும்.

இந்த ஒழுங்கமைந்த படைப்புச் சூழலை உருவாக்கி பழமையான புனைவுகளை களைந்து விடுவது தமிழ்மொழியை அதிகாரத்துவ எல்லையிலிருந்து விடுவித்து மக்களோடு பிணைந்த,அவர் நலன்களை மையப்படுத்தியவொரு புதிய வீரியமுடைய மொழியாக வளரவிடுவது நமக்கான இருப்பினது குறைந்தபட்சத் தேவைதாம்.இவ்வகை நோக்கத்தை அறிவினது பரப்பின் மத்தியிலிருந்து உணர்வுத்தளத்துக்கு மாற்றிவிடும் கேடுகெட்ட மயக்கம், தூய்மைவாதப் புனைவுகளாக கொட்டிவைத்த புராண இதிகாசங்களுக்கு இறையிற்தன்மையைக் கொடுத்தது, இருப்பை நிறுவிக்கொள்வதற்கே.இருப்பை உறுதி செய்த அன்றைய பொருளியல் நலனானது இன்றைய கணினிமயப்பட்ட புதிய வாழ்வியல் மதிப்பீடுகளுக்கேற்றதல்ல.நமது கால பொருளியல் வாழ்வானது மிகவும் முன்னேறிய உற்பத்திச் சக்திகளோடு உறவாடும் மனித்தேவைகளை வலியுறுத்தும்போது பழமையான இலக்கிய-கலை மாதிரிகளால் இன்றைய மனிதர்களின் ஆத்மீகத் தேவைகளை திருப்திப் படுத்த முடியாது.எனவே கட்டுடைப்பும்அதன் வாயிலாக புதிய முன்னெடுப்புகளும் மானுடநோக்கில் அவசியமாகும்.இதைப் புறந்தள்ளும் எந்த முன்னெடுப்புகளும்,விமர்சனங்களும் இன்றைய சூழலை மிகக் கேவலமான முறையிற் புரிந்த அரைவேக்காட்டு உளப் பாங்கின் வெளிப்பாடுகளே!

ப.வி.ஸ்ரீரங்கன்
07.05.2005


Thursday, May 05, 2005

மொழியும்,புதியசொற்களின் தேவையும்.

மொழியும்,புதியசொற்களின் தேவையும்.

தமிழ் ஒரு மொழி. அதன் வளர்ச்சி-அழிவு யாவும் அதன் பயன்பாட்டை நுகரும் மக்களின் பொருளாதாரப் பலத்துடன் சம்பந்தப்பட்டது.பொருள் வளர்ச்சியுடன்தாம் மொழிதோன்றி வளர்கிறதேயொழிய வெறும் மனவிருப்புகளின் படியல்ல.


உற்பத்திச் சக்திகளை அன்நிய மொழிகள்தாம் கட்டுப்படுத்தும்போது உற்பத்தியுறுவுகளின் பயன்பாட்டு மொழியான தமிழ் எவ்வளவு காலத்துக்குத் தாக்குப்பிடிக்கும்.எந்த மொழியும் தனித்தூய்மையாக வளரமுடியாது.வளர்ச்சியடைந்த ஐரோப்பிய மொழிகள் யாவும் வேற்று மொழிச்சொற்களை உள்வாங்கி வளர்ந்துள்ளன.மருத்துவம் பயிலும் மாணவருக்குப் புரியும் இலத்தீனது சொற்கள் எவ்வளவு ஜேர்மன்,ஆங்கிலம்,பிரஞ்சிலும் கொட்டிக்கிடக்கிறதென.


தமிழின் கட்டுமரத்தை ஐரோப்பிய மொழிகள் அப்படியே'கற்றுமறாம்'என்றே அழைக்கின்றார்கள்.


மொழிமாற்றும்-ஒலிமாற்றும் ஒருமொழிக்கு அவசியமானது.இதைமறுக்கும் மொழி மெல்லச் சாகும்.


பஸ்,கார்,இரயில்,சயிக்கிள்,பேனை,கொப்பி,பென்சில்,ரேசர்,கட்டர்,
கொம்பாஸ்,ரயர்,ரேடியோ,டெலிபோன் இவையாவும் ஒலிமாற்றாகும்.இவை தமிழ் கிடையாது, எனவே தமிழில்தான் மாற்றி எழுதுவோமெனும் அறிவு மூடத்தனமானது.இவையும் ஒலிமாற்றுத் தமிழ்.அன்நிய வார்த்தைகள் பிரிவுக்குள் அடங்கும்.நம்மிடம்தாம் அப்படியொரு அகராதியே கிடையாதே.


வார்த்தைகளுள் தூய்மை காண்பது இருக்கட்டும்,முதலில் தமிழுக்கொரு சிறந்த முறையிலான-எல்லோரும் கற்கும் வகையிலான இலக்கண நூலை உருவாக்குங்கள்.அப்போது தமிழின் விருத்திக்கு வித்திட்டதாக இருக்கும்.தொல்காப்பியத்தை வைத்துச் சவாரிசெய்வது விருத்தியுறும் மொழிக்கு உதவாது.


ஆங்கிலம்,ஜேர்மன்,பிரஞ்சு மொழிகளில் இருக்கும் இலக்கண நூல்கள்போன்ற அறிவார்ந்த இலக்கணக் கட்டுக் கோப்பை உருவாக்கி முன்வைக்கும் தேவையே மிக,மிக அவசியம் தமிழுக்கு.மீளவும் சொல்வோம்: ஒரு மொழியின் வாழ்வு சொல்லாக்கத்துடன்- ஒலிமாற்றுடன்தாம் வளர்வுறும்.தனித்த கெட்டிப்பட்ட சொல்லுருவாக்கம் -உதாரணம்:துவிச்சக்கரவண்டி,பேரூந்து,புகையிரதம் போன்று பின் தங்கிவிடும்.


மக்களால் பரவலாகப் பேசப்படும் தொழில்நுட்பப் பெயர்களான 'ஒலிமாற்றுச் சொற்களைக்' களைவது மொழியை அழிப்பதற்குச் சமன்.மொழியின் உயிர் வாழ்வானது ஒழுங்கமைந்த அரசினதும்,பொருளாதாரப் பலத்தினதும் காத்திரமான உறுதியினாலேதாம் தீர்மானிக்கப்படுகிறது.இதைவிட்டு தன்னார்வச் செயற்திட்டம் ஒருபோதும் மொழியினது இருப்பை உறுதி செய்யமுடியாது.


ஸ்ரீரங்கன்

Wednesday, May 04, 2005

வேண்டுகோள்!,வேண்டுகோள்!!

வேண்டுகோள்!,வேண்டுகோள்!!




மொழிவழி வாழ்வையும்-மக்களின் சமூக சீவியத்தையும் துண்டு துண்டாகப் பிரிக்க முடியாது! ஒருவர் தனது வர்க்கஞ்சார்ந்து-சுயநலன் சார்ந்து எதைவேண்டுமானாலும் கூறுவார்,அது அவரது மட்டரமான சுயநலன்.இப்போது எனது பதில்களையும்-குறிப்புகளையும் தமிழ்பேசும் மக்களுக்கெதிராக நிறுத்த டோண்டு ஐயா முனைந்தால்-அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!



நான் மொழிவழி வாழ்வில் தமிழ் மீதும்,தமிழ்பேசும் மக்களின் உயிர்வாழ்வுமீதும் அளவற்ற பற்றுடையவன்.தழிழால் சிந்திப்பவன்.தமிழினத்துக்கெதிராக எது நிற்பினும் அதை எதிர்ப்பவன்.எனது பதிவுகள் சமவுடமைக் கண்ணேட்டமே தவிர தமிழுக்கோ அன்றி எனது இனத்துக்கோ எதிரானதல்ல!தமிழரின் வாழ்வைக் கருவறுக்கும் எந்த அரசியலுக்கும் சார்பாக எனது எழுத்துப்போவதாக இருப்பின்-எனது பதிவையே அழித்துவிடுவேன்.



தங்கமணியின் பின்னூட்டத்தில் யாராவது வந்து'ஸ்ரீரங்கன்'உமது கருத்துக்கள் நம்மைப் பலவீனப்படுத்தும் அரசியலுக்கு உதவுகிறது'என்றுகூறும் பட்சத்தில்-இன்றிலிருந்து03.05.2005 வரும்08.05.2005 க்குள் எனது பதிவுகள் அழிக்கப்படும்.எவரும் கூறாதபோது தொடரப்படும்!என் எழுத்துக்களை எதிரி பயன் படுத்தும் நிலையானால்,அதை அழிப்பதில் மகிழ்வுடன் இருக்கிறேன்.



ப.வி.ஸ்ரீரங்கன்
03.05.2005

Tuesday, May 03, 2005

இதயம் முளைக்கும்?

இதயம் முளைக்கும்?



கபாலம் சிதறக்
குருதி நிலம் நோக்கும்
துடிப்பு மெல்ல விலகி
நெடில் மூக்கைத் துளைக்க
கடுமுழைப்பில் களைத்த மூளை புழுதியுளுறையும்


ஒரு விரலசைவில்
ஒழிந்த மனிதக் கனவு
உண்மையின் முகத்தில்
துளிர்த்துக் கொள்ளும்



உறுவுகளின்
மௌனித்திருக்கும்
மனம்
ஒரு
நொடியினில் துயில் கலைத்து
குருதி நெடில் கலைவதற்குள் மலர்களின் புன்னகையில்
இதயத்தை உரசிக்கொள்ளும்


வார்த்தையின்றி
எரிந்து கொண்ட மெழுகுவர்த்தியோ
கணப்பொழுதில் கரைந்தவுணர்வில் கரையொதுங்கும்


தீட்டுப்பட்ட
மனிதவுடல் தீக்காக
வெளுத்துக் கிடக்கிறது
மீள் நோக்கா வீரவணக்கமோ
மீட்டுவதற்கு முந்திக் கொண்ட
உணர்வுக் கிடங்கில் உருக்குலைந்தது
புகழ் பாடிய வலைப் பூக்களைப்போல்


ஒளியைவிட
மரணங்கள் விலகிக்கொள்ள
அள்ளியெடுத்த வாய்க்கரிசி எதற்கென்றறியா
காலமும்,
சில துளிக் கண்ணீருமாய் உறவுக்கோலமும்
சாய்ந்த மெய்யருகே
சென்று திரும்பும்!


வினைமுற்றிய
விருப்புறுதி
மீளவும்
முண்டு கொடுப்பதற்கான உடல்களை
துணிவு
தீரர்
வீரர்
அறிஞர்
விற்பனர்
சொற்பனர் என்று தேடிக்கொள்ளும்!


ஏனென்ற கேள்வியறியா
கனவுக் குடங்களுக்கு
எழுதிவைத்து இடித்துரைத்தால்
இதயம் முளைக்கும்?

02.05.2005
ப:வி.ஸ்ரீரங்கன்

Sunday, May 01, 2005

மீண்டும்,மீண்டும் நிருபணமாகிய வர்க்க நலன்!

மீண்டும்,மீண்டும் நிருபணமாகிய வர்க்க நலன்!


மேதின ஊர்வலம்...நமக்குத் தெரிந்த அரசியல்தாம் இது,எனவே ஏமாற்றமில்லை.ஆனால் நமது மக்கள்? பாவப்பட்ட மக்கள், பேதமையான உள்ளங்கொண்ட பாமர மக்களை எவர் காப்பாற்றுவார்? தமிழ் மொழிமீதான பற்றுறுதி தமது உயிரைக்கொடுப்பதற்குக்கூடத் தயங்காத தியாக உள்ளத்தை நம் மக்களுக்கு ஏற்படுத்தியது.இவர்கள் தமது திண்ணைக்குள் முடங்கியிருந்து,தமது குடும்பம்-உறுவுகளென வாழ்ந்த சராசரி வாழ்வை- புழுதிதோய்ந்த கல்லொழுங்கையூடாய் -கடலேரி நீரூடாய் கால் புதைத்து ஊர்விட்டு ஊர்போய் மனிதத்தைப்புரிய வைத்தது இந்தத் தமிழ் உணர்வு!தன் தேசத்தைப்- பெற்ற குழந்தையைவிட நேசிக்கத்தூண்டியதும் இந்தத் தமிழ் உணர்வே.ஆனால் அந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்புத்தாம் இங்கு ஓடியொழித்துவிட்டது.


இப்போது மத்திய ஐரோப்பிய நேரம் 16.மணி(மாலை 4மணி),இன்று காலை 9.30 மணிக்கு இடுஸில்டோல்வ்(Duesseldorf) நகரத்தில் கூடினோம்.மே தின ஊர்வலம்!உலகத்து மக்ளெல்லம் செங்கொடிகளோடு திரண்டிருக்க,நாம் தமிழர்கள் கிட்டத்தட்ட 150 நபர்கள் புலிகளின் தலைமையில் திரண்டுகொண்டோம்,நாதஸ்வர இசையோடு. சந்திரிகா ஆயுதங்கள் கொள்வனவு செய்யும் கேலிச்சித்திரக் கொடியும் முன்னணியில் நிற்க,மற்றெல்லோர்கைகளிலும்(கிட்டத்தட்ட80 வீதமானவர்களிடம்) திரு.பிராபாகரனின் திருவுருவப்படமும்,மீதமானவரின் கைகளில் 'சுனாமி நிதி உதவியை நீதியான முறையில் பங்கீடு செய்' எனும் அட்டைகளும்,'நாங்களும் ஒரு இனம்,ஓடுக்குமுறையற்றுத் தோழமையுடன் வாழவேண்டும்' என்ற அட்டைகளும் காணப் பட்டன! வழமையான'தமிழரின் தாயகம் தமிழீழம்' எனும் பதாகைகளைக் காணவில்லை. ஊர்வலம் நகரத்தொடங்கியதும் இளைஞர்கள் பாட்டுக்கோஷ்டிப்போல் பாடத் தொடங்கினார்கள்'எங்கள் தலைவன் பிரபாகரன்,எங்கள் தலைவன் பிரபாகரன்!' வான் அதிர்ந்தது.அதே அரசியல்.மாறவேயில்லை.


இரண்டுதினங்களுக்கு முன் கொலையான பத்திரிகையாளன் சிவராம் பற்றிய எந்த அட்டையுமில்லை-குறிப்புமில்லை. எனக்குக்கோபம் அதிகமாகி தலை வெடிக்கும் நிலை! மெல்லச் சென்று புலிகளின் பொறுப்பாளர்களிடம் கேட்டேன்:இதுவென்ன அரசியல்?முந்தநாள் படுகொலையான பத்திரிகையாளனுக்காக எல்லோரும் எழுதியும்,அழுதும் கூக்குரலிட்டோம். தலைவர் மாமனிதன் பட்டமும் கொடுத்தார்!இன்றிந்தப் படுகொலையை வெளிநாட்டு மக்களுக்கு முன் கொணர்ந்து, இலங்கை அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா? இதை வெகுஜனத்தளத்தில் வைத்து விமர்சித்து உலக அரங்கில் நம் உரிமையின் நியாயப்பாட்டைச் சொல்லவேண்டாமா? கேள்விகளை அவர்களிடம் கேட்டோம். பதில் வரவேயில்லை.எல்லோரும் திருட்டு முழி முழிக்கிறார்கள்.ஏன்? நான் விட்டபாடில்லை!'அண்ணே ஏதோ நேரம் போதவில்லை, அதனால் அவர் பற்றிய அட்டைகளை எடுத்து வரவில்லை' ஒருவர் கூறினார்.என்னயிது, ஒழுங்கமைந்தவொரு அமைப்பின் பதிலாகுமா இது?கேட்டேன்.நானே அட்டை எழுதிவைத்துள்ளேன,; உங்களுக்கு முடியவில்லை? அண்ணே உங்களுக்கு எங்களால பதில் சொல்ல முடியாது, நீங்கள் பணிமனையோடு கதையுங்கள், இன்னொரு உறுப்பினரின் கருத்திது. மீளவும் என் விமர்சனத்தைப் பொறுக்கமுடியாத அவர்கள் 'ஏதோ தவறு நடந்திருக்குப்போல கிடக்கு' என்றார்கள்.இதுதாம் அவர்கள் அரசியல்.

ஊர்வலத்தை நோட்டம் விட்டபடி மெல்ல நகர்ந்தேன்,நடுவினில் புலிகளின் இளைஞர் அணி'புலம்பெயர்ந்தோர் இளைய எழுத்தாளர் முன்னணி' என்ற கொடி பிடித்தார்கள்.கொடி பிடித்திருப்பவரில் ஒருவர் முதியவர்.என் வயதை ஒத்தவர்.யாரடாயிது இளைஞர் அணிக்கு முதியவர் கொடிபிடிக்கிறாரேயென்று உற்று நோக்கினேன்.அட! நம்ம நண்பர்தாம்.சுமார் 15 வருடங்களுக்கு முன் இலக்கியச் சந்திப்பில் வாதப்பிரதிவாதம் செய்து கொண்டவொரு பத்திரிகை ஆசிரியர் அவர்.மனிதன் என்னை மறந்து விட்டார்.மீசையில்லை,கூடாவே நன்றாகத் தலை நரைத்துப்போய் நான் படுகிழவனின் தோற்றத்தில்.அவரை பெயர் சொல்லி என்ன முருகதாஸ் அண்ணே சவுக்கியமாவென்றேன். ஓம் என்றார்.எழுத்தாளர் நீங்கள்,எனவே ஒரு எழுத்தாளன்-பத்திரிகையாளன் கொலைப்பட்டானே அதை அம்பலப் படுத்தவேண்டாமா என்றேன்.பதில் வரவேயில்லை.மீளக்கேட்டபோது சொன்னார்:'தற்செயலா...'இதற்குப்பிறகு வார்த்தை வரவேயில்லை.என்ன தற்செயலா?சொல்லுங்கள், நான். அவரிடம் பதிலில்லை.


மேதின ஊர்வலமும்,தமிழர்களும் புலிகளின் அரசியல் நகர்வும் எம்மை ஆச்சரியப் படுத்தவில்லை.ஏலவே நாம் பார்த்த அரசியல்தாம்.இது மாறிவிட்டது-அவர்கள் முன்னையமாதிரியில்லை-என்பதெல்லாம் வெறும் வெற்றுவேட்டு வார்த்தைகளே! அவர்களின் வர்க்க அரசியலில் அவர்கள் என்றும் தெளிவாகவேயிருக்கிறார்கள்.இந்த உதாரணங்கள் சிலமாதிரிகள்தாம்.இதை வைத்து நாம் எழுதியொன்றும் ஆவதில்லை.நாமே நமது இருள்சூழ்ந்த பக்கங்களை மறைத்தல் எதனால் நிகழ்கிறது? இங்குதாம் வர்க்க இருப்பின் உணர்வே அதைத் தீர்மானிக்கிறது.ஜனநாயகத்துக்கான போராட்டத்தை புலிகளால் என்றும் முன்னெடுக்க முடியாது.இதுபோன்றேதாம் மற்றைய ஈழ இயங்கங்களின் நிலையும். இந்த நிலையில் இந்திய ஊடகங்கள் சிவராமின் மரணத்தை மறைத்து விட்டதாகப் புலம்பி ஆவதென்ன நண்பர்களே?நாங்களே முன்னெடுக்க எமது வர்க்க நலனும்-இருப்பும் விடாதபோது இந்தியப் பிராந்திய நலன் இதைச் செய்யவேண்டுமென எதிர்பார்த்தல் சரியாகுமோ?


சிவராமின் கொலையை மேதின ஊர்வலத்தில் வெகுஜனப்படுத்தாத புலிகளின் அரசியல் தமிழ் மக்கள் நலன் சார்ந்ததா? ஏதோ சொல்லித் தொலையுங்கள்!

ப.வி.ஸ்ரீரங்கன்
01.05.2005

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...